அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தைளை பெற்றெடுத்துள்ளார். உலகின் சுமார் 470 கோடி பேரில் ஒருவருக்கு தான் இந்த அதிசயம் நிகழ வாய்ப்பிருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் தெல்மா சியாகா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண். இவர் டெக்சாஸில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சியாகாவுக்கு அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை காலைவேளையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. 9 மணி நேர இடைவெளியில், 500 கிராம் முதல் 1000 கிராம் எடையுடன் இக்குழந்தைகள் பிறந்துள்ளன.

காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண் இரட்டையர்களும் பிறந்தனர். குழந்தைகள் நலமாக இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக வைத்தியர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் இரட்டையர்களுக்கு ஜீனா மற்றும் ஜுரியல் என்று அவர்களது தாயான தெல்மா சியாகா பெயரிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.