பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் முன்னெடுக்கப்பட்ட மஞ்சள் அங்கி போராட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி 17 பொலிஸார் உட்பட 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் பாரிஸ் நகரமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த வன்முறையில் 120 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மஞ்சள் அங்கி போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், திடீரென போராட்டத்தின் போது கலவரம் வெடித்த்து.

பிரான்சில் பெற்றோல் மற்றும் டீசல் மீதான வரியை பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் உயர்த்துவதாகத் தெரிவித்து அங்கு தொடர் மாபெரும் போராட்டம் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், கார் சாரதிகளின் மஞ்சள் அங்கியை அணிந்து கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குறித்த போாட்டம் ‘மஞ்சள் அங்கி போராட்டம்’ என அழைக்கப்பட்டது. 

வார இறுதி நாட்களில் மாத்திரமே நடைபெறும் குறித்த போராட்டத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் தலைமையிலான அரசாங்கம் உடன்பட்டது. பெற்றோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை இரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டம் வாரஇறுதி நாட்களில் இடம்பெற்று வந்தது.

அந்த வகையில் நேற்று முன்தினம் பிரான்ஸின் தலைநகர் பாரிசில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது போத்தல்கள் கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மேலும் அங்குள்ள, அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வந்து செல்லக்கூடிய புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் ஆடம்பர கைப்பைகளை விற்கும் கடை, வங்கி கட்டிடம் உள்ளிட்டவற்றுக்கு  ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். இதையடுத்து அவர்களை விரட்டி அடிக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடியையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.