குடிமக்களின் காணிகளை இலங்கை இராணுவம் அரைகுறையாகவே விடுவித்திருக்கிறது - புதிய ஆய்வறிக்கையில் தகவல்

Published By: Priyatharshan

17 Mar, 2019 | 07:51 PM
image

விடுதலை புலிகளுடனான போரின்போது கையகப்படுத்திய குடிமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கு அளித்த உறுதிமொழியை இலங்கை இராணுவம் அரைகுறையாகவே நிறைவேற்றியிருக்கிறது என்றும் படுமோசமான வேலையில்லாத் திணடாட்டம் நிலவுகின்ற வடமாகாணத்தில் அகதிகளின் மீள்குடியேற்றம் இதனால் தாமதிக்கப்படுகிறது என்றும் புதிய ஆய்வொன்றுக்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது என்பதை அறிய ஆய்வொன்றை ' வெறைற் றிசேர்ச் ' என்ற சிந்தைக்குழாம் அமைப்பு நடத்தியது. 

 அந்த ஆய்வுக்குப் பின்னர் விரிவான அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது." காணிகளை விடுவிப்பதில் முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்ற போதிலும், கணிசமான எண்ணிக்கையில் குடிமக்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே தொடர்ந்தும் இருக்கிறார்கள் " என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

2015 அக்டோபரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீராமானத்தின் ஏற்பாடுகளை, அதாவது மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. தீர்மானம் 30/1  உள்நாட்டுப்போரில் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளின் பிரதான அங்கமாக விளங்குகிறது.தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்  மனித உரிமைகள் பேரவையின் 40 வது கூட்டத்தொடரில் இவ்வாரம் அந்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையும் கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கிறது. இத்தகைய பின்புலத்தில், 2018 பெப்ரவரிக்குப்பிறகு 30/1 தீர்மானத்தில் உள்ள நடவடிக்கை எடுக்கவேண்டிய 36 கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கத்தினால் காணப்பட்டிருக்கக்கூடிய முன்னேற்றம் குறித்து ' வெறைற் றிசேர்ச் ' ஆய்வைச்செய்திருக்கிறது.

 2017 இறுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியேற்றப்படவேண்டியவர்களாக 39,978 பேர் (12,465 குடும்பங்கள் ) இருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சு மதிப்பிட்டிருந்தது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களில், 36,989 பேர் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தங்கியிருந்ததுடன்  2,998 பேர் இரு மாகாணங்களிலும் உள்ள நலன்புரி நிலையங்களில் வசித்தனர்.2018 மார்ச் அளவில் 2,216 பேர் (627 குடும்பங்கள் ) உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்தனர்.இவர்கள் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் என்று அரசாங்கம் அறிவித்தது

முல்லைத்தீவில் கேப்பாபிலவு வாசிகள தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி இரு வருடங்களாக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.2018 ஆம் ஆண்டில் காணிகளை விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்டபோதிலும், காணிகள் மீதான தொடர்ச்சியான இராணுவக்கட்டுப்பாடு வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள்  முள்ளிக்குளம் பகுதிக்கு திரும்பமுடியாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் பெரும்பாலும் விவசாயத்துக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்குமே பயன்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் 1000 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச நிலம் 2018 டிசம்பரில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட போதிலும்  இராணுவத்தினரால் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று வெறைற் றிசேர்ச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

" இராணுவம் தொடர்ந்தும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதேவேளை, வடக்கு, கிழக்கில் உள்ள பல பகுதிகளில்  தங்களது காணிகளை விடுவிக்குமாறு கோரும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் காணாமல்போனோரின் குடும்பங்கள் உட்பட, சிவில் சமூகச்செயற்பாட்டாளர்களையும் குடிமக்களையும் இராணுவம் அச்சுறுத்துவதாகவும் துன்புறுத்துவதாகவும் அறிவிக்கப்படுகிறது" என்றும் அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது. 

 ' என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா, புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம், கம்பெரலிய திட்டம் ஆகியவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கில் வாழ்வாதார அபிவிருத்திக்கு ஆதரவளிக்க சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் வெறைற் றிசேர்ச், முழு நாட்டுடனும் ஒப்பிடும்போது வேலையில்லாத்திண்டாட்டம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே மிகவும் கூடுதலாக ( வடக்கில் 7.7 சதவீதம் , கிழக்கில் 6 சதவீதம் ) இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அறிக்கையில் முக்கியமாக கவனத்திற்கெடுத்திருக்கிறது.

வேலையில்லாத்திண்டாட்டம் குறிப்பாக, பெண்கள் மத்தியில் உயர்வாக இருக்கிறது. இது கிழக்கில் 13 சதவீதமாகவும் வடக்கில் 15.5 சதவீதமாகவும் காணப்படுகிறது. இந்த மதிப்பீடு தேசியரீதியில் பெண்கள் மத்தியிலான வேலையில்லாத்திண்டாட்ட வீதத்தின் (6.5) இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

 30/1 ஜெனீவா தீர்மானம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான 36 கடப்பாடுகளில் ஆக 6 கடப்பாடுகளையே அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த தீர்மானத்தின் கீழான பெரும்பாலான கடப்பாடுகளின் நடைமுறைப்படுத்தலில் எந்த மாற்றத்தையும் கடந்தவருடம் காணக்கூடியதாக இருக்கவில்லை. அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கும் கடப்பாடுகளில்  இராணுவம் வசமிருக்கும் காணிகளை விடுவிக்கும் கடப்பாடும் உள்ளடங்குகிறது. பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள, இராணுவமயநீக்கம், குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உட்பட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தலில் படுமோசமான தாமதம் காட்டப்படுகின்ற கடப்பாடுகளில் முக்கியமானவை என்று வெறைற் றிசேர்ச் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36