பொறுப்புக்கூறலுக்காக கால அவகாசம் வழங்குதால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும் ஏமாற்றி அதனை தட்டிக்கழிப்பதற்கே வழி வகுக்கும் என தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதன் ஜெனீவாவிலிருந்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைகள் பேரவை பங்கேற்பதற்கு தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?பதில்:- தமிழர் மரபுரிமைகள் பேரவையானது, கடந்த வருடம் ஆவணி 28ஆம் திகதி சிங்களக்குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்திலே பாரிய ஜனநாயகப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம்.இந்தப்போராட்டத்தினை அடுத்து எமது கோரக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் சமர்ப்பித்திருந்தோம். ஆனாலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஓரணியில் திரண்டு முன்னெடுத்த அத்தகைய போராட்டம் உட்பட தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் தொடரும் ஆக்கிரமிப்பை சர்வதேசத்தின் கவனத்திற்குகொண்டு வருவதற்காக மனித உரிமைகள் பேரவையின் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளோம்.கேள்வி:- ஜெனீவாவில் எத்தகைய விடயங்களை பிரஸ்தாபித்துள்ளீர்கள்?பதில்:- 40 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூலமான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு ஐ.நா. கால அவகாசத்தினை வழங்கியிருந்தது. அவ்வாறான காலத்தில் இலங்கையில் இருந்தவாறே ஆயிரத்து 500 சொற்களுக்கு உட்பட்டதாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்கின்றமையை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றாதாரங்கள் உள்ளடங்கிய ஆவணத்தினை சமர்பித்திருந்தோம். அவ்வாறான நிலையில் தற்போது அந்த ஆவணத்தின் விரிவான அறிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலும், அங்ககத்துவ நாடுகளுக்கும் ஆணையாளர் அலுவலகத்திற்கும் சமர்ப்பித்துள்ளேன்.இதனைவிடவும் நான் கலந்துகொண்ட பிரதான நிகழ்வுகள் மற்றும் பக்க நிகழ்வுகள் பலவற்றிலும் புலம்பெயர் தரப்பினருடனான கலந்துரையாடல்களின்போதும் யுத்தத்தின் பின்னரான சூழலில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு சம்பந்தமான விடயங்களை தெளிவுபடுத்தி உறுதியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றேன்.கேள்வி:- உங்களது விரிவான அறிக்கையிலும் ஏனைய சர்வதேச தரப்பினருடனான சந்திப்புக்களிலும் நீங்கள் எத்தகைய விடயங்களை வலியுறுத்திக் கூறியுள்ளீர்கள்?பதில்:- மூன்று விடயங்களை பிரதானமாக குறிப்பிட்டுள்ளோம். அதில் முதலாவதாக, அபிவிருத்தி என்ற போர்வையில் எல்லைக்கிராமங்களில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களை ஆதரங்களுடன் நிரூபித்துள்ளோம். இரண்டாவதாக இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடு தொடர்பில் கிழக்கு மாகாணத்துடனான புள்ளிவிபரத்துடன் ஒப்பிட்டு எடுத்துக் கூறியுள்ளோம். உதாரணமாக கிழக்கில் கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இனப்பரம்பல் மாற்றியமைக்கப்பட்டதோ அதுபோன்றதொரு நிலைமையே வடக்கிலும் நடைபெறுகின்றது. மூன்றாவதாக, தொல்லியல் திணைக்களம் பிரகடனப்படுத்திய வரலாற்றுப்பிரதேசங்களில் 50சதவீதமானவை வடமாகாணத்தில் இருப்பதுடன் அவை வெளிப்படையான ஆய்வுகளின்றி திட்டமிட்டு பௌத்த மதத்தினை முன்னிலைப்படுத்தும் உள்ளோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றமையை கள ஆய்வுத் தரவுகளுடன் குறிப்பிட்டுள்ளோம்.வனவளப்பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் பொருளாதார ரீதியாக தமிழர்களை மலினப்படுத்தும் வகையில் காணிகளை ஆளகைக்கு உட்படுத்துதல் சம்பந்தமாக எடுத்துரைத்துள்ளோம். முக்கியமாக 15ஆயிரம் ஏக்கர் நிலம் தொடர்பில் பொதுமக்களிடத்தில் ஆவணங்கள் இருந்தும் அவை கையளிக்கப்படாது இந்த திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதை கூறியுள்ளோம்.கேள்வி:- சர்வதேச தரப்புக்களிடத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு தொடர்பான ஆதாரங்களை முன்வைக்கின்றபோது அவர்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன?பதில்:- ஐ.நா மனித உரிமைப்பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட சர்வதேச தரப்பினரிடத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான எமது அறிக்கையை முன்வைத்து விபரிக்கின்றபோது அவர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் நடைபெறுகின்ற இத்தகைய இன அழிப்பு தொடர்பில் அதிர்ச்சி அடைந்ததோடு தமது அதிருப்தியையும் வெளியிட்டியிருந்தனர். மேலும் முதற்தடவையாக இத்தகைய அறிக்கையொன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த தரப்பினர்கள் எம்மிடத்தில் தெரிவித்தனர்.கேள்வி:- சர்வதேச தரப்புக்கள் அதிர்ச்சியடைந்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக நீங்கள் கூறியுள்ள நிலையில் அதன் பிரதிபலிப்புக்கள் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையில் தாக்கத்தினை செலுத்த வாய்ப்புக்கள் உள்ளனவா?பதில்:- சர்வதேச தரப்புக்கள் உடனடியாக எத்தகைய முடிவுகளை எடுக்கும் என்று எம்மால் உறுதியாக கூறமுடியாது. ஆனால் எமது அறிக்கையால் அவர்களின் மனச்சாட்சியை நிச்சயம் சீண்டும். விசேடமாக பேரவையின் ஆசிய பசுப்பிராந்திய அலுவலக அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தபோது மனித உரிமைகள் மீறல்கள்ரூபவ் காணமலாக்கப்பட்டவர்கள் விடயங்கள் உள்ளிட்டவற்றையும் விரிவாக எடுத்துக் கூறியிருந்தோம். இவற்றின் காரணத்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் கலந்துகொள்ளும் ஏனைய தரப்புக்களின் பிரதிபலிப்புக்கள் எதிர்காலத்தில் ஏற்படு;ம் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறலுக்காக இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்படுவது தொடர்பில் பிரேரணையை முன்னகர்த்தவுள்ள தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தினீர்களா?பதில்:- ஆம், அவர்களுடன் மட்டுமல்ல ஏனைய உறுப்புநாடுகள் மற்றும் ஆணையாளர் அலுவலகத்தரப்புக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை தெளிவு படுத்தி தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறித்து எமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினோம்.குறிப்பாக, இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் விசேட சர்வதேச கண்காணிப்பு மற்றும் நிகழ்ச்சித்திட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினோம். அவ்வாறான நிபந்தனைகளின்றி வெறுமனே கால அவகாசம் வழங்கப்படுவதானது, இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தையும் ஐ.நாவையும் மீண்டும் ஏமாற்றுவதற்கே வழி வகுக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம். மேலும் சில அரசியல் கட்சிகள் கால அவகாசம் வழங்குவதை ஏற்றுக்கொண்டாலும் ஒட்டுமொத்தமாக பாதிக்க மக்கள் தமது கண்ட ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் மூலம் மேலும் கால அவகாசம் வழங்குவதை விரும்பவில்லை என்ற விடயத்தினையும் காணமல்போனவர்கள் பற்றி அலுவலகமானது வெறுமனே ஏமாற்றும் விடயம் என்பதையும் திடமாக குறிப்பிட்டுள்ளோம்.கேள்வி:- பொறுப்புக்கூறலுக்காக கால அவகாசம் வழங்க கூடாது என்ற விடயத்தினை வலுவாக முன்வைக்கின்றபோது அவர்களின் பிரதிபலிப்புக்கள் எவ்வாறு இருந்தன?பதில்:- ஆணையாளர் அலுவலகம் இலங்;கை விடயத்தில் தெளிவாக உள்ளது. குள நிலைமைகளை துல்லியமாக கொண்டுள்ளது. ஆனாலும் பேரவையின் உறுப்பு நாடுகள் முன்வைக்கின்ற பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே அதன் பணியாக இருக்கின்றது.அவ்வாறான நிலையில் ஆணையாளரின் அபிப்பிராயங்களும் பேரவைக்கு முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் உறுப்பு நாடுகளே தீர்மானத்தினை மேற்கொள்கின்றன. ஆகவே உறுப்பு நாடுகளிடத்தில் வலுவாக நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் சர்வதேச மேற்பார்வையொன்று இரண்டு வருடங்களுக்கு நீடிக்கின்றதே என்பது பிரேரணையை கொண்டுவருகின்ற நாடுகளின் நிலைப்பாடாக இருக்கின்றது. எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை விரும்பவில்லை என்பதை அவர்களிடத்தில் நேரடியாகவே கூறியுள்ளோம்.
(நேர்காணல்:- ஆர்.ராம்)