இனப்பகை அரசியலை முன்னெடுக்கும் இந்திய இலங்கை அரசுகள் ஒருபோதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை புரிந்து கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க கூடாது என்பதற்காகவே கால அவகாசம் வழங்கப்படுகின்றதென நடிகர் சங்கத்துணைத்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா புறப்படுவதற்கு முன்னர் வீரகேசரிக்கு வழங்கிய விசேடசெவ்வி செவ்வியின்போது தெரிவித்தார். 
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,கேள்வி:- இலங்கைக்கு வருகைதந்து ஈழத்தமிழர்களின் விடயங்களை நேரில் அவதானித்துச் சென்றுள்ள நீங்கள் ஜெனீவாவுக்கு செல்லவுள்ளீர்கள். அங்கு நீதிகோரும் ஈழத்தமிழர்களுக்காக எவ்வாறான கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளீர்கள்?பதில்:- ஈழத்தமிழர் விடியலுக்காக பல ஆண்டுகளாக போராடியும், உயிர்நீத்து ஈகம் செய்தும் தமிழ்நாட்டு தமிழர்கள் போராடி வருகின்றனர். இந்த உணர்வு தொப்புள் கொடி தமிழர்களான ஈழத்தமிழர்களுக்கும் – தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமான பிரிக்கமுடியாத உறவாகும். கடல் மட்டும்தான் எங்களை பிரித்து வைத்திருக்கிறது. உணர்வு எப்போதும் இணைந்தே இருக்கும்.நான் பல ஆண்டுகளாக எமது ஈழச்சொந்தங்களுக்கு குரல் கொடுத்து வருகிறேன். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறிய பின்னர் அவர்களுக்கான எனது குரல் விரிவடைந்துள்ளது. மனக்காயம் ஆறாமல் நிலைகொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான், சிலமாதங்களுக்கு முன்பு நான் இலங்கைச்சென்றேன். நேரடியாக மக்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் மக்கள் துன்புறும் நிலையிலிருந்து மீளவில்லை. இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளேயே மக்கள் உள்ளார்கள். அந்த மக்களின் குமுறலை, என்னால் நேரடியாக காணமுடிந்தது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர்களது போராட்ட உணர்வுக்கு உலக நீதி செவிசாய்க்கவில்லை. சிங்கள பௌத்த பேரினவாத கொடுமையிலிருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் அதாவது ஈழத்தமிழர் மக்களுக்கு நடந்தேறியது அப்பட்டமான இனப்படு கொலை என்பதை சர்வதேச விசாரணை ஊடாக உறுதி செய்து பேரினவாத்திற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக உரிய தண்டனை கிடைக்கச் செய்யவேண்டம்.மேலும், தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தில் நடந்தேறியது இனப்படுகொலையே. அதற்காக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அந்த தீர்மானத்தினையும் ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலம் தாழ்த்தாது நீதி வழங்க வேண்டும். இவ்வாறான விடயங்களை சர்வதேசத்தின் முன்னிலையில் முன்வைக்கவே நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குச் செல்லவுள்ளேன்.கேள்வி:- இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதை எப்படி பார்க்கின்றீர்கள்?பதில்:- எத்தனை ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்தாலும், நடந்த இனப்படு கொலையை மூடி மறைக்க முடியாது. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்தின் விளைவாகவே சர்வதேசம் காலம் கடத்துகிறது. இதற்கு இனப்பகை அரசியலே முற்றமுழுதாக காரணமாகவுள்ளது. இலங்கை கடல் பிரதேசத்தில் யார் நிலைகொண்டு நிற்பது என இந்தியாவும் சீனாவும் போட்டிபோடுகிற நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இலங்கை அரசு அரசியல் ரீதியாக காய்நகர்த்திக் கொண்டிருக்கிறது.இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பு அரணாக விடுதலைப்புலிகளே இருந்தார்கள். தற்போது சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக் கடற்பரப்பை ஆக்கிரமித்து விட்டன. இங்கு சீனா இந்தியா போட்டி நிலவுகிறது. புலிகள் இருந்தவரை எந்த புள்ளிகளும் உள்ளே நுழைய முடியந்திருக்கவில்லை. மறுபக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுவீழ்த்துகிறது. இன்னொரு புறம் சீனாவில் ஆதிக்கம் கச்சத்தீவு வரை கொடிகட்டி பறக்கிறது.விடுதலைப்புலிகள் செயல் ஆற்றலோடு இருந்திருந்தால் இவையெல்லாம் நடக்குமா? 2008 மாவீரர் நாள் உரையில் “இந்தியாவிற்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்று தேசியத் தலைவர் உரைத்தார். ஆனால் இந்தியா அப்போது அந்த விடயத்தினைக் கண்டு கொள்ளவே இல்லை. இப்போது இந்தியா இலங்கையிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தியாவிற்கு இலங்கைக்கும் தமிழர்கள் என்றால் பகையாளிகள். இதுதான் உள்ளக அரசியலாக உள்ளது.ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு வந்துவிட்டால் சிங்கள அரசு தனிமைப்பட்டுவிடும். இதை நடக்க விடாமல் செய்யவே இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் கைகோர்த்து நிற்கிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேசம் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு துணையாக நிற்க கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் காலம் கடத்துவதற்கு அவகாசம் வழங்கப்படுகின்றது. இதன் ஆணிவேர் ஏற்கனவே கூறியதைப்போன்று இனப்பகை அரசியல்தான். எப்படியாயினும் இரவு விடியாமல் போகாது.கேள்வி:- பாதிக்கப்பட்ட மக்களின் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் ஜெனீவா அரங்கில் தொடர்ச்சியாக அமைதி காத்து வருவது பற்றி?பதில்:- ஏற்கனவே கூறியதைப்போன்று இனப்பகை அரசியல் காரணமாக, தமிழர்களுக்கு விடிவு வந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் எப்போதும் தமிழர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்தியா அமைதி காக்கிறது என்பதை நாம் எளிமையாக புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா தமிழர்கள் பக்கம் நின்று பேசினால் ஜெனீவா அரங்கில் புதிய மாற்றம் வரும். அது எப்போதும் நடக்காது. இதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். வேறு என்னதான் இதற்கு தீர்வு என்றால்., தொடர் மக்கள் திரள் போராட்டமே இந்தியா –இலங்கையை அம்பலப்படுத்துவதற்கான ஆயுதமாகும். அதன்மூலமே சர்வதேசம் வேறுவழியின்றி ஓர் அரசியல் தீர்வுக்கு இறங்கி வரவேண்டிய நிலையை ஏற்படுத்தும். அந்த சூழல் மிக விரைவில் வரும்.கேள்வி:- தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி இந்த விடயத்தில் எத்தகையை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது?பதில்:- எமது தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை “தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் அறவழி அரசியல் படை. தொடர்ந்து உரிமைகள் கிடக்கும் வரை போராடுவோம். தமிழக மக்களிடையே மட்டுமல்லாத சர்வதேச நாடுகளும் உணரும் விதமாக அறவழிப் போராட்டங்களை கையிலெடுக்கும். அதன் அறிவிப்பு விரைவில் வரும். ஈழ மக்களுக்கான நிரந்த தீர்வு வரும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான விடியல் கிடக்கும் வரை அது ஓயாது.கேள்வி:- யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தங்களது கட்சியின் கரிசனைகள், முடிவுகள் எப்படியிருக்கின்றன?பதில்:- முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் அம்மக்கள் ஏதிலிகளாக தமிழகம் வந்து பல முகாம்களில் உள்ளனர் அவர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் பெற தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.அதேபோல் அண்மையில் காவிரிடெல்டாவை காவுவாங்கிய “கஜாபுயல்” புதுக்கோட்டையில் உள்ள அகதிமுகாமையும் விட்டு வைக்கவில்லை இலங்கை அகதிகளுக்கு உதவ யாருமே முன் வரவில்லை. திருவாடனை சட்ட மன்ற உறுப்பினராகிய நான் புதுக்கோட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்ட அகதி முகாமில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான நிவாரண உதவிகள் செய்தேன்.எமது மேற்பார்வையில் இராமேசுவர அகதிமுகாம்களுக்கு சென்று உதவி வழங்கப்படுகின்றது. எத்தனையே முகாம்ங்களில் உள்ள ஈழமாணவர்களுக்காக கல்விச்செலவுகளை ஏற்று பல பட்டதாரிகளை உருவாக்கியுள்ளேன். அதன் தொடர்ச்சியாகதான் ஈழ ஏதிலியர் பயன்பெறுவதற்காக சிவகங்கையில் கல்லூரி ஒன்றை தொடங்கவுள்ளேன். அதற்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்குத்தான் இலங்கைக்குச் சென்று முதல்வர் விக்னேஸ்வரன் அய்யாவிற்கு அழைப்புவிடுத்துள்ளேன். அவரும் வருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் முன்னிலையில் விரைவில் ஈழத்தமிழர்களுக்கான கல்லூரி தமிழ்நாட்டில் மலரும்.  (நேர்காணல் ஆர்.ராம்)