தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு, கூட்டமைப்பு கால அவகாசம் வழங்குமா என்பது தொடர்பிலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் விளக்கம்

கேள்வி - இலங்கை பாராளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளது. ஆனால் வரவு செலவுத்திட்டப் பிரேரணை வாசிப்பு மீதான விவாதங்களின்போது அது சம்பந்தமாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பிர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான உங்களுடைய கருத்து என்ன.

பதில் - ஒரு வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது அதிலே வரவுசெலவுத் திட்ட அமைப்பிலே உள்ள தவறுகள் அனைத்தையும் இறுதி வரைவிற்கு முன் சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உண்டு. அந்தப் பொறுப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு எனவே நாம் நேரடியாக அவர்களது வரவுசெலவுத்திட்டத்திலுள்ள தவறுகள் அனைத்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். 

முக்கியமாக பாதுகாப்பிற்காக அவர்கள் ஒதுக்கிய 396 மில்லியன் ரூபாக்கள் மிகவும் தவறான ஒன்று என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. யுத்த காலத்தில் கூட 200மில்லியன்கள் 2008ஆம் ஆண்டு 200 மில்லியன்கள் பாவிக்கப்பட்டிருந்தது. இன்று இரண்டு மடங்காகியிருக்கின்றது. எனவே இது ஒரு இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வா என்றவொரு சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது. அது உட்பட வேறும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

இதிலே தனியாக ரணில் விக்கிரமசிங்கவின் அரசு மட்டும் இதில் அல்ல இதிலே மைத்திரிபால சிறீசேன அவர்கள்தான் அமைச்சிற்குப் பொறுப்பானவராகவும் இந்த அரசின் முக்கிய அதிகாரியாகவும் அங்கு இருக்கின்றார். எனவே அவரது எண்ணங்கள்கூட இங்கு பிரதிபலிக்கும். எம்மைப்பொறுத்தவரை வரவுசெலவுத்திட்டத்தில் சகல குறைகளையும் சுடடிக்காட்டியிருக்கின்றோம். அதேவேளை இந்தமுறை ஆதரவாக வாக்களித்திருக்கின்றோம் என்றால் அது ஆதரவாக வாக்களித்தோம் என்று நீங்கள் எடுக்கவேண்டாம். யார் இந்த ஆட்சிக்கு மீண்டும் வர்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த தீர்மானமாக நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஏன் எனில் எமது மக்கள் முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் அராஜக ஆட்சியின்கீழ் பட்ட துன்பங்கள் மறந்துவிட்டதுபோல் தெரிகின்றது. அது மறக்கப்பட முடியாத பாரிய துன்பங்கள். எனவே மீண்டும் அந்தத் துன்பத்தில் எமது மக்களைத் தள்ளுவதான முடிவுகளை நாங்கள் எடுக்கமாட்டோம்.

எனவே யாருக்கு ஆதரவளித்தது என்பதல்ல யாருக்கு ஆதரவளிக்கக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.

கேள்வி - ஆனால் மக்கள் இரட்டை நிலைப்பாட்டில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவே சொல்லிவருகிறார்களே?

பதில் - மக்களின் பார்வைகளுக்கு அது தெரிந்தாலும் இதுதான் உண்மை விடையம். மகிந்த ராஜபக்ஷ அரசோ மீண்டும் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின் கீழான ஒரு அரசோ இந்த நாடில் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தொடர்சியாக இப்படியன காட்டமான முடிவுகளை எடுக்கும். இது தமிழ் மக்களுக்கான தேவையான முடிவு.

கேள்வி - ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலே இலங்கைக்கு மேலும் கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலா அல்லது கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலா நீங்கள் உள்ளீர்கள்.

பதில் - மனித உரிமைகள் பேரவை என்பதே ஒரு கண்துடைப்பு அமைப்பு. மனித உரிமைகள் பேரவை ஒரு நாட்டின் அனுசரணையுடன் ஒரு நாடு ஏற்றுககொள்ளும் விடயங்களை மட்டும் முன்னெடுத்துச்செல்லும். மிகக் கடுமையான சூழல்களில் மட்டும் வல்லரசுகளின் ஆதரவுடன் பல அரசுகளுக்கு எதிரான முடிவுகளை ஐ.நா சபை எடுத்திருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை எமக்கு எவ்வளவு தூரம் இந்த வல்லரசுகளின் ஆதரவு இருக்கும் என்பதில் சந்தேகமே.

இந்த வல்லரசுகளின் ஆதரவு இருந்திருந்தால் இந்த ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் இன்று வென்றிருக்கவேண்டும். எனவே இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தினை தோற்கடித்த நாடுகளை நம்பி நாம் பயணிப்பதில் எந்தப் பிரியோசனங்களும் இல்லை. அதேபோல் ஐ.நா சபை எடுக்கும் இந்த நடவடிக்கைளும் என்றோ ஓர் நாள்குப்பைத் தொட்டியில் தூக்கிப்போடவேண்டிய விடயங்களாகத்தான் முடியப்போகின்றன.

எனவே இதில் கால அவகாசம் என்ற கதைக்கு இடமில்லை. இந்தக் காலத்தில் இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிடியை தளர்தாதவரை வைத்துக்கொண்டு எமது மக்களின் மீது திணிக்கப்பட்ட காணி அபகரிப்பு, கொலைப் பயமுறுத்தல்கள், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் பலவற்றினை இன்னும் நாங்கள் நிறைவேற்றவேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்காக எடுக்கப்பட்ட முடிவு.

கேள்வி - எடுக்கப்பட்ட முடிவு எது?

பதில் - ஆதாவது இந்த ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இதைக் கால அவகாசம் என்று நீங்கள் கூறவே முடியாது. எவ்வளவு தூரம் நாங்கள் இந்த அரசை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என்பதற்கான ஒரு விடயம். இதிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகள் அங்கு முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்படப்போவதில்லை.

இதற்கான பிரேரணை கொண்டுவருவதற்கான எந்தவொரு அதிகாரமும் எம்மிடம் இல்லை.

கேள்வி - ஆக மொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறதா? அல்லது கொடுக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறதா?

பதில் - கால அவகாசம் என்ற வசனமே தவறு என்று சொல்லும்போது, அது கால அவகாசம் என்பதல்ல இந்த இலங்கை மனிதஉரிமையை மீறியதற்கான எதிர் நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வரை அவர்களை எமது மனித உரிமை ஆணைக் குழுவின் பிடியிலிருந்து நழுவிச் செல்லாதவரை வைத்திருக்கவேண்டும் என்பதை மட்டும்தான் அதாவது ஒரு இணை அனுசரணை கொடுத்திருக்கிறார்கள்.

இணை அனுசரணையில் இந்த இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட சகல விடயங்களையும் நிறைவேற்றும் வரை அவர்களது பிடி ஐ.நா சபையிலிருந்து விலகிவிடக் கூடாது என்றுதான் நான் சொல்கின்றேன். அதற்காகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுக்குமென்று நான் நம்புகின்றேன்.

கேள்வி - நீங்கள் நேரடியாக கால அவகாசம் கொடுக்கவேண்டுமா? இல்லையா என்பதை சொல்லவில்லை.

பதில் - இல்லை. கால அவகாசம் என்ற விடயமே தவறானதொரு சொற் பிரயோகம். கால அவகாசம் என்பதல்ல இதை நிறைவேற்றும் வரை இணை அனுசரணையில் ஏற்றுக்கொண்ட சகலவற்றினையும் நிறைவேற்றும்வரை இவர்களை ஐ.நா மனித உரிமை ஆணைகுழுவின் பிடியில் வைத்திருப்பது நல்லது.