நியுசிலாந்தின் மசூதிகளில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் பயனாளர்கள் மத்தியில் பரவுவதை  கட்டுப்படுத்த முடியாமல் சமூக ஊடங்கள் திணறியுள்ளன

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அதனை முகநூல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்

17 நிமிடங்கள் நீடிக்கும் குறிப்பிட்ட வீடியோ துப்பாக்கிதாரி மசூதிக்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை காண்பித்துள்ளது.

முகநூலில் குறிப்பிட்ட வீடியோ வெளியாகியுள்ளமை குறித்து நியுசிலாந்து காவல்துறையினர் எங்களிற்கு தகவல்களை வழங்கினார்கள் என முகநூல் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உடனடியாக தாக்குதலை மேற்கொண்டவரின் இன்ஸ்டகிராம் மற்றும் முகநூல்களை அகற்றினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எப்போது வீடியோ அகற்றப்பட்டது என்பதை அந்த அதிகாரி தெரிவிக்கவில்லை.

எனினும் தாக்குதல் இடம்பெற்று பல மணிநேரத்தின் பின்னரும் தாக்குதல் வீடியோக்களை சமூக ஊடகங்களில் காணமுடிந்தது.

இது சமூக ஊடகநிறுவனங்களிடம் ஆபத்தான பதிவுகளை கட்டுப்படுத்த கூடிய திறன் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டவரை பாராட்டும் அல்லது அவரிற்கு ஆதரவளிக்கும் பதிவுகளை நாங்கள் நீக்கிவருகின்றோம் என முகநூல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிபிரயோகம் தொடர்பான முகவரியொன்றை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள டுவிட்டர் வீடியோவை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது

யூடியுப் எப்போது அந்த வீடியோவை அகற்றியது என்பது தொடர்பில் நிறுவன அதிகாரிகள் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

சமூக ஊடக பாவனையாளர்களை குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்துகொள்வதை தவிர்க்குமாறு  வேண்டுகோள் விடுத்துள்ள நியுசிலாந்து காவல்துறையினர் அந்த வீடியோவை அகற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்

கொலையாளிகள் தங்கள் கொலைகள் குறித்து வெளியிடும் வீடியோக்களையும் ஏனைய பயங்கரமான வீடியோக்களையும் தடுக்கமுடியாமல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தோல்வியடைந்தது இது முதல்தடவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தாய்லாந்து டென்மார்க் ஆகிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன