புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேசத்தில் 51 கிலோ கிராம் மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

வில்பத்து சரணாலயத்தில் சுற்றித்திரியும் மரைகளை வேட்டையாடி அறுத்து இறைச்சியாக விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய  தகவலையடுத்து, வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழுவொன்று விஷேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டது.

இதன்போது,  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 38 கிலோ கிராம் எடையுள்ள உலர்ந்த மரை இறைச்சியும், 14 கிலோ கிராம் புதிதாக அறுக்கப்பட்ட மரை இறைச்சியும் மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் மேலும் சிலர் இணைந்து இவ்வாறு வில்பத்து சரணாலயத்தில் சுற்றித் திரியும் மான், மரைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.