கென்யாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  இன்று (15) பிற்பகல் கென்யாவின் நைரோபி நகரிலுள்ள சர்வதேச விவசாய காடு வளர்ப்பு ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் தலைமையகத்திற்கு (ICRAF) கண்காணிப்பு விஜயமொன்றை  மேற்கொண்டார்.

அந்த நிறுவனத்திற்கு சென்ற ஜனாதிபதியை, அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டொனி சிமன்ஸ் (Dr.Tony Simons) உள்ளிட்ட பணிக்குழாமினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

விவசாய காடு வளர்ப்பு பற்றிய சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகள் இந்த மத்திய நிலையத்தினூடாக மேற்கொள்ளப்படுவதுடன், காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை வனங்களின் பேண்தகு முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணுகைக்கான விசேட அறிவையும் இந்நிலையம் வழங்குகின்றது. இந்த நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் கண்டறியப்படும் விடயங்களை ஏனைய நாடுகளுக்கும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கும்  விவசாயிகளுக்கும் வழங்குவதுடன், தாவரங்களிலுள்ள மின்சக்தியை விவசாயத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் சூழல்நேய நடைமுறைகளின் ஊடாக பயன்படுத்துவதற்கான வழிக்காட்டல்களையும் வழங்குகின்றன.

இலங்கையிலும் விவசாயத் துறையின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்த சர்வதேச மத்திய  நிலையம் உதவியுள்ளதுடன், அந்நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதியிடம் இந்நிறுவனம் விருப்பம் தெரிவித்தது.

விவசாய ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் பற்றிய ஒரு அறிமுகத்தை அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி அவர்களுக்கு முன்வைத்ததுடன், இதன்போது இலங்கையுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய அம்சங்களும் விளக்கப்பட்டன.

இந்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் தொழிநுட்ப அறிவினூடாக இலங்கையின் விவசாய துறையின் மேம்பாட்டிற்கு பெற்றுக்கொள்ள முடியுமான பங்களிப்பு பற்றி இந்நிறுவனத்துடன்  எதிர்காலத்தில் ஒருங்கிணைப்புடன் செயற்படுவது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் தற்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு அந்த ஆராய்ச்சி நிறுவனத்துடன் நெருங்கிச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.