நாட்டில்  வெகுஜன ஊடகவியலாளர்களின் தொழிற் தரத்தினை உயர்த்தும் நோக்குடன் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள 'அசிதிசி' ஊடக புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (15) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நாடு தழுவிய ரீதியல் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலமைப் பரிசிலை வழங்கி வைத்தார்.

இலங்கையில்  அங்கீகாரம் பெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையாற்றும் ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் கடந்த வருடம் ஜுலை மாதம் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைவாக ஊடகத் துறை அமைச்சில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இப்புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகத்துறை சார் கற்கை நெறிகள், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள், டிப்ளோமாக் கற்கை நெறிகள் உள்ளிட்ட நீண்ட கால மற்றும் குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிகள் போன்றவற்றுக்காக இப்புலமைப் பரிசில் நிதி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் கற்கை நெறிகளுக்கமைவாக அதி கூடிய புலமைப் பரிசில் தொகையாக இரண்டு இலட்சம் ரூபா முதல் கற்கை நெறிகளின் கால அளவுகளுக்கேற்ப இப்புலமைப் பரிசில் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இப்புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வின்போது வடக்கு-கிழக்கு உள்ளிட்ட நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன், ஊடகத்துறை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட ஊடகத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டனர்.