(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மக்களின் அபிப்ராயத்துடன் வெற்றிப்பெற வேண்டும். எனவே மக்களின் அரசியல் தீர்ப்பிற்கு  அரசியல்வாதிகள் ஒருபோதும் தடைகளை ஏற்படுத்தாமல் விலகிக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைய இனியும் வேண்டாம் என்ற  தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியினர் நேற்று நுகேகொட நகரில் மக்கள் சந்திப்பினை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை   எந்தளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு   முன்னாள்  ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க,  மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  இந்நாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறந்த குறுகிய கால எடுக்துக்காட்டு.   

முறையற்ற  செயற்பாடுகளுக்க துணைபோகும் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று  20 ஆவது திருத்தை நாங்கள் தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளோம். இதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள்  பொருத்தமற்றது. 

ஆகவே  20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமாயின்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் ஆதரவும் அவசியம்  என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்   பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்கள் எடுப்பதை காட்டிலும் மக்கள் தீர்மானம் எடுப்பது சிறப்பானது என்றார்.