சுமார் 30 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்றதாகக் கூறப்படும் இரு இலங்கைப் பெண்களை இந்தியாவின் புனே விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இரு பெண்களும் சிங்கப்பூரிலிருந்து ஜெட் எயார்வேய்ஸ் மூலம் புனே வந்திறங்கியதாகவும், தங்களது உடைமைகளை சுங்க அதிகாரிகளுக்குக் காண்பிக்காமல் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே அவர்கள் பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை அவதானித்த பின்னர் இடைமறித்து விசாரித்த சுங்க அதிகாரிகள் அவர்களிடம் சங்கிலி, காப்ப மற்றும் தங்க பிஸ்கட் வடிவில் 24 கரட் தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். 

அவற்றின் மொத்த எடை 914.15 கிராம் ஆகும். அவற்றின் பெறுமதி 30 இலட்சத்து 31 ஆயிரத்து 937 இந்திய ரூபா என்றும், மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றது என்றும் புனே விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.