300 ரூபா காணாமல்போனதற்காக 12 வயதான சிறுவனை தீக்காயங்களுக்குள்ளாக்கிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த பெண்ணின் கைப்பையில் 300 ரூபா காணாமல் போனதற்காக 12 வயது சிறுவனை கொள்ளி கட்டையால் அடித்து தீக்காயங்களுக்குள்ளான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அகலவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அகலவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னஹேன பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான சிறுவனின் தாயார் சிறுவனின் தந்தையை கைவிட்டுச் சென்ற நிலையில், தந்தையார் வேறு ஒருபெண்ணுடன் வாழ்க்கை நடாத்தி வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவைளை, குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளதாகவும் தனது இரு குழந்தைகளையும் விட்டு விட்டு குறித்த சிறுவனின் தந்தையுடன் இணைந்து வாழ்வது தெரியவந்துள்ளது. 

குறித்த பெண்  ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிலையில் மூத்த சகோதரன் வீட்டில் தங்கியிருந்தபோது கைப்பையில் வைத்திருந்த 300 ரூபாவை காணாமல்போன நிலையில் குறித்த சிறுவன் திருடிவிட்டதாக கொள்ளிகட்டையால் தீக்காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த  சிறுவன் தீக்காயங்களுடன் பாடசாலைக்கு சென்றபோது காய்ச்சல் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது. 

சிறுவன் மீது தீக்காயங்களை உண்டாக்கிய பெண்ணை கைதுசெய்துள்ள நிலையில், நீதவான் நிதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.