எனது கண்முன்னால் பலர் துடிதுடித்து வீழ்வதை பார்த்தேன் என நியுசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் விபரித்துள்ளார்

மசூதிக்கு அருகில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை துப்பாக்கி சத்தத்தையும் பலர் அதிலிருந்து தப்புவதற்காக ஓடுவதையும் பார்த்தேன் என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்

பலர் நிலத்தில் வீழ்வதை பார்த்தேன் எனது கண்ணிற்கு முன்னாள் அவர்கள் சுடப்பட்டனர் என அந்த நபர் ரேடியோ நியுசிலாந்திற்கு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நான் உதவிக்கு விரைந்தேன் என குறிப்பிட்டுள்ள அந்த நபர் காயமடைந்திருந்த ஐந்துவயது சிறுமிக்கு மருத்துவசிகிச்சை வழங்கினேன் சிறுமியின் தந்தையும் தாக்குதலிற்கு உள்ளாகியிருந்தார் என தெரிவித்துள்ளார்

சிறுமியின் நிலை ஆபத்தானதாக காணப்பட்டது  நாங்கள் அம்புலன்ஸ் வருவதற்கு முன்னர் அவரை வேறு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நானும் எனது சகாக்களும் அந்த பகுதியிலேயே ஒரு மணிநேரத்திற்கு மேல்  நின்றிருந்தோம்,அவ்வேளை துப்பாக்கி தாரி அந்த பகுதியிலேயே காணப்பட்டார் என தெரிவித்துள்ள அந்த நபர் தாக்குதலை மேற்கொண்ட நபர் மசூதியிலிருந்து வெளியேறுவதையும் மசூதிக்கு வெளியே அவர் பலரை துரத்திசெல்வதையும்  நான் பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது சகா ஒருவர் காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை வழங்கிக்கொண்டிருந்தவேளை மசூதிக்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது எனினும் அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் எங்களை பற்றி சிந்திக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட நபர் இராணுவஉடை போன்றவொன்றை அணிந்திருந்தார்,அவரிடம் துப்பாக்கிகளும் ரவைகளும் காணப்பட்டன அவர் உள்ளே நுழைந்து தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தார் என அஹமட் அல் மஹ்முட் என்பவர் தெரிவித்துள்ளார்.

கதவுகளையும் ஜன்னல்களையும் உடைத்தே அனைவரையும் வெளியேற்றவேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.