Published by R. Kalaichelvan on 2019-03-15 15:35:47
“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் நாளை ஆரம்பம் இலங்கை பிக்கு பரம்பரையின் உன்னத பங்களிப்பில் பேணப்பட்டு வந்த தூய பௌத்த போதனைகள் உள்ளடங்கிய தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதையிட்டு நாளை முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதி “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேரவாத திரிபீடகத்தினை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு அனைத்து பௌத்த நாடுகளினதும் ஒத்துழைப்புடன் இலங்கை முன்மொழிவினை சமர்ப்பிக்கும் தேசிய மகோற்சவம் மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் மைத்ரிபால சிறிசேன பங்குபற்றலில் மார்ச் 23ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.
தேரவாத திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அலுவிகார புண்ணிய பூமியில் அண்மையில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து புனித திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தி பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மகாசங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து உலகளாவிய பௌத்த மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகம், புத்தசாசன அமைச்சு, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன ஏனைய அமைச்சுக்களுடன் ஒன்றிணைந்து
“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் முழுவதும் பல்வேறு சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாரம் முழுவதும் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், இல்லங்கள், வாகனங்கள் மற்றும் பெருந்தெருக்களில் பெளத்த கொடியினை காட்சிப்படுத்துமாறு சகல மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வார காலத்தில் மாலை 6.00 மணி முதல் 6.15 வரை நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் ஒலி பூஜைகள் இடம்பெறும்.
அத்தோடு “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரத்துடன் இணைந்ததாக புனித தந்தங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளும் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் ஆரம்பமாகும் மார்ச் 16ஆம் திகதி பொலிஸ் பிரிவு மட்டத்தில் நாடளாவிய ரீதியில் அன்னதான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை விகாரைகளிலும் பல்வேறு சமய செயற்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டிட வசதியின்றி மர நிழலில் இடம்பெறும் அறநெறி பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 226 விகாரைகளில் அறநெறி பாடசாலை கட்டிடங்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இந்த அனைத்து நிர்மாணப் பணிகளையும் மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்து அவற்றை மாணவர்களிடம் கையளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
மார்ச் 18ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை மையப்படுத்தி சமய நிகழ்வுகள் இடம்பெறுவதோடு, மார்ச் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனியார் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 20ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினம் “ஜனாதிபதி சதகம் யாத்ரா” நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் திரிபீடக தர்மபோதனைகள் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் போதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மார்ச் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்யும் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், மார்ச் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச நிறுவனங்களினால் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமய வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மார்ச் 23ஆம் திகதி சனிக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெறும் தேசிய மகோற்சவத்துடன் “திரிபீடகாபிவந்தனா” (புனித திரிபீடக) வாரம் நிறைவுபெறும்.