நியுசிலாந்தில் மசூதியில் தாக்குதல் இடம்பெற்றவேளை பங்களாதேஸ் அணியினர் மசூதிக்கு மிக அருகிலேயேயிருந்தனர் என  அணியின் முகாமையாளர் காலேட் மசூட் தெரிவித்துள்ளார்.

மசூதி தாக்குதலிற்கு பின்னர் செய்தியாளர்களிடம்  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது நாங்கள் ஒருபோதும் எதிர்பாராத உலகத்தின் எந்த பகுதியிலும் இடம்பெறக்கூடாது என எதிர்பார்க்கும் சம்பவம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிஸ்டசாலிகள் என தெரிவித்துள்ள அவர் ஒருசிலரை தவிர ஏனையவர்கள் அனைவரும் பேருந்திலிருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மசூதிக்கு மிக அருகிலிருந்தோம் எங்களால் என்ன நடக்கின்றது என்பதை பார்க்க முடிந்தது எனவும் பங்களாதேஸ் அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்

நாங்கள் மசூதியிலிருந்து 50யார் தொலைவிலிருந்தவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் உண்மையிலேயே அதிஸ்டசாலிகள் என்ற தெரிவிக்கவேண்டும் இரண்டு மூன்று நிமிடங்கள் முன்கூட்டியே நாங்கள் அங்கு சென்றிருந்தால் நாங்கள் தாக்குதல் இடம்பெற்ற வேளை மசூதிக்குள் இருந்திருப்போம் அது பாரிய சம்பவமாகியிருக்கும் எனவும் காலேட் மசூட் தெரிவித்துள்ளார்.

நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்காதது எங்கள் அதிஸ்டமே எனினும் திரைப்படங்களில் பார்த்ததை  நேரில் பார்த்தோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இரத்தக்கறைகளுடன் மக்கள் மசூதியிலிருந்து வெளியே தப்பியோடுவதை பார்த்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள்  முதலில் பேருந்துக்குள் பதுங்கியிருந்தோம் பின்னர் யாராவது பேருந்து மீது தாக்குதலை மேற்கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்து வெளியில் இறங்கி ஓடத்தொடங்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.