முப்பது வயதிற்குள் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய பாதிப்பு என பல ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு ஆளாகிறோம். வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் உடனே உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைபயிற்சி, வாழ்க்கை நடைமுறை மாற்றம் என பல விடயங்களை ஒரே சமயத்தில் மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைப்பார். எம்மில் சிலர் இதனை சில நாள்களுக்கு கடைபிடித்துவிட்டு பிறகு சோம்பலின் காரணமாக இடையிலேயே விட்டுவிடுவார்கள்.

ஆனால் இதற்கு வைத்தியர்கள் மற்றொரு விடயத்தையும் பரிந்துரைக்கிறார்கள். அதாவது நீச்சலடிக்குமாறு பரிந்துரை செய்கிறார்கள். உடனே அவர்களிடம் நீச்சலடிப்பதால் உடலுக்கு என்ன நன்மை என கேட்டபோது, அவர்கள் அளிக்கும் விளக்கம் எம்மை ஆச்சரியப்படுத்துவதுடன், நீச்சல் பழகவேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.

முறையான பயிற்சிக்கு பின்னர் நீச்சலடிக்கும் போது, கை, தோள்பட்டை, முழங்கை, வயிறு, முதுகுத்தண்டுவடத்தை சுற்றியுள்ள தசைகள், வயிற்றிலுள்ள தசைகள் என அனைத்து தசைகளும் வேலை செய்கின்றன. இதனால் உடலுக்கு நல்லதொரு அமைப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையை ஒரே சீராக பராமரிக்க இயலும். இதயம் மற்றும் நுரையீரல் நன்கு செயற்பட தூண்டுகிறது. இதனால் இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு மன அழுத்தம் குறைகிறது. 

காற்றின் அடர்த்தியை விட நீரின் அடர்த்தி பல மடங்கு அதிகம். எனவே அதனை கடக்க உடல் அதிகலளவிலான சக்தியை செலவிடுகிறது. இதன் மூலம் அரை மணித் தியாலத்தில் இயல்பான அளவை விட, (370 கலோரி) அதிக அளவிற்கு கலோரி எரிக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை கரைத்து, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கிறது. இரத்தத்தில் உள்ள சீனியின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

நீச்சல் பயிற்சியின் போது எலும்பு மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு நல்லதொரு நெகிழ்வு தன்மை கிடைக்கிறது. இதனால் மூட்டுகளின் ஆயுள் அதிகரிக்கிறது. இரவில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தூக்க மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதில், தினமும் ஒரு மணி நேரம் நீச்சலடித்தால் நன்றாக உறக்கம் வரும். 

நீச்சல் வீரர்களை பரிசோதிக்கும் போது, ஏனைய சாதாரண மனிதர்களை விட நினைவுத்திறன் அதிகமாக இருக்கும். அத்துடன் இவர்களிடம் நேர்மறை எண்ணங்களும், பொறுமையும் இருப்பதால் சமூக தொடர்பில் வல்லவர்களாக இருப்பார்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின்  காரணமாக அவர்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு, அவர்கள் நீச்சல் அடிப்பதால் குறைகிறது. அத்துடன் சுக பிரசவத்திற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது. அதனால் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இன்றிலிருந்து நீச்சல் பயிற்சிக்கு சென்று, நீந்த கற்றுக்கொண்டு, நீச்சலடித்து உங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.