(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த அரசாங்கத்தை காப்பாற்ற முன்வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. நல்லாட்சி எனக்கூறி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வந்த ஆட்சியிலும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இந்த அரசாங்கத்தின் ஆட்சி  நல்லாட்சி என்று கூறிக்கொண்டே முன்னெடுக்கப்பட்டது  அன்று இந்த ஆட்சியை கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டவர்கள் இன்று இந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளவர்களாக, எமது மக்களின் அதிகளவிலான வாக்குகளை அபகரித்துக் கொண்டவர்களாக தமிழ்த் தரப்பினர் இருக்கின்றனர். 

இந்த ஆட்சியில் பேரம் பேச வேண்டிய போதியளவு வாய்ப்புகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஆளுங்கட்சியிலேயே இருக்கின்றார்கள். இவர்கள் இந்த அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால்\  இந்த அரசு தற்போதுள்ள அறுதி பெரும்பான்மையையும் இழந்துவிடும் நிலை இருக்கின்றது.

 .அடுத்தவன் செய்தால் துரோகம்! தாம் செய்தால் ராஜதந்திரம்!! என்ற ஏமாற்று நாடகங்கள் எல்லாம் மக்களின் மன அரங்கில் இனி ஒரு போதும் ஏறாது. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புகின்ற அகதிகள் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றியும்  கூற வேண்டியுள்ளது. குறிப்பாக இவ்வாறு இலங்கை திரும்பியவர்களில் சுமார் 2400 குடும்பங்கள் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பிரதேச பிரிவுகளில் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். 

இருந்தும் இம் மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளதாக அம் மக்கள் தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலை இருக்கின்ற போது, இந்தியாவில் இருக்கின்ற ஏனைய அகதி மக்கள் எந்த நம்பிக்கையில் மீள இலங்கை திரும்புவார்கள்? என்ற கேள்வி எழுகின்றது

இன்று இந்த நாட்டில் வறுமை அதிகம் கொண்ட மாகாணமாக வடக்கு மாகாணமும், அதற்கடுத்த நிலையில் கிழக்கு மாகாணமும் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் உற்பத்தித்துறைகளில் முன்னேற்றம் இல்லை. கைத்தொழிற்துறை வீழ்ச்சி நிலையினையே காட்டுகின்றது. 

வேலையின்மை பிரச்சினையானது அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் மத்திய மற்றும் மாகாண ரீதியலான அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களும் பிற மாவட்ட ஆளணிகளால் நிரப்பப்படுகின்றன. பல்வேறு வகையிலான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சுமந்தவர்களாக எமது மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம் போய்க் கூறி ஆறுதல் பெறுவது எனத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். தங்களது குறைகளை கடவுளிடம் போய்க் கூறலாம் என எமது மக்கள்  கோவில்களுக்கு சென்றாலும், கோவில்களையும் தொல்பொருள் என்ற ரீதியல் ஆக்கிரமித்துக் கொள்கின்ற நிலையே இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்றார்.