இடைத்தேர்தலையும் சந்திக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்..!“லோக்சபா தேர்தலோடு நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்” என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதனுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு தேர்தலையும் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க, கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீட்டையும் முடித்துள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் கட்சி தொடங்கி, தீவிரமாக அரசியல் பணியாற்றி வரும் கமல்ஹாசன், வரும் லோக்சபா தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவருடைய கட்சிக்கு சின்னமாக பேட்டரி டார்ச் லைட் கிடைத்துள்ளது. எனினும், இடைத் தேர்தல் குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்ததால், மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் மட்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான விருப்ப மனு அளிப்பவர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கான டிமாண்ட் டிராஃப்ட் செலுத்தி, அதனை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும், கட்சியின் இணையதளத்திலும் விருப்ப மனுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்; லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்” என கமல் கூறிய நிலையில், தற்போது அதிரடியாக இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.