முந்தல், மதுரங்குளி நகரில் இன்று இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ரயில்வே திணைக்களத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி கீர்த்திசிங்க கம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இன்று, காலை நாத்தாண்டிய பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ஜீப் ஒன்றும், மதுரங்குளியில் இருந்து முந்தல் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் பாடுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், பாடுகாயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் புத்தளம்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசு ஜீப் வாகனத்தின் சாரதி் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸார் விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.