பிரிட்டிஷ் பிரஜையான குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செய்த மேன்முறையீட்டை வாபஸ் பெற்றிருக்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட 20 வருட சிறைத்தண்டனையை அவர்கள் அனுபவிக்கப்போகிறார்கள்.

2011 டிசம்பரில் குராம் ஷேய்க்கை கொலை செய்ததற்காகவும் அவரின் ரஷ்ய காதலியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியமைக்காகவும் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக செய்த மேன்முறையீட்டை வாபஸ் பெற்ற குற்றவாளிகளில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபத்திரவும் ஒருவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குற்றவாளிகள் தங்களது சட்டத்தரணி ஊடாக வாபஸ் பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டனர். அதை அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய திகதியில் இருந்து அவர்கள்  தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், வழக்கின் நான்காவது பிரதிவாதி மாத்திரம் மேன்முறையீட்டை வாபஸ்பெறவில்லை. அவரது மேன்முறையீட்டு மனு  எதிர்வரும் ஜூலை 24 விசாரணைக்கு எடுக்கப்படும்.

2011 டிசம்பர் மாதம் நத்தாருக்கு  முன்னதாக தங்காலையில் ரேகாவிவல் உள்ள உல்லாசப்பயண  ஹோட்டலில் களியாட்ட விருந்தி்ன்போது  பிரிட்டிஷ் பிரஜையான குராம் ஷேய்க்கை( வயது 32) தாக்கிக் கொலைசெய்ததுடன் அவரது காதலியான ரஷ்யாவைச் சேர்ந்த விக்டோரியா அலெக்சாண்ட்ரோவ்னாைவை தாக்கி பாலியல் வன்கெடுமைக்கு ஆளாக்கியமைக்காக  ஜந்து பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 வருடகால கடூழியச் சிறைத்தண்டனையை விதித்தது.