(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, மஹிந்த ஆட்சியில் இளைஞர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரின் தேசியக்கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி,  திறன்கள் அபிவிருத்தி,இளைஞர் அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

இந்த வரவு செலவு திட்டத்தில் ஒருசில நல்ல திட்டங்கள் உள்ளன. அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் மிகவும் மோசமான பல யோசனைகளை உள்ளன. இன்று நாட்டின் பொருளாதார சுமை அதிகரித்துள்ளது. வெறுமனே புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு செயற்பட முடியாது. எமது கடன் சுமை அதிகரித்துள்ளது, ரூபாவின் வீழ்ச்சிக்கு என்ன தீர்வு, வேலையின்மை எண்ணிக்கை  அதிகரித்துள்ளது, வெளிநாட்டு இருப்பு குறைவடைந்துள்ளது. 

அதேபோல் இந்த நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியின் பின்னரே வீழ்ச்சி கண்டது என்பதே அரசாங்கதின் தர்க்கமாக உள்ளது. ஆனால் அரசாங்கத்தின்  நான்கு ஆண்டுகளில் பொருளாதார தரம் வளர்ச்சியிலா இருந்ததா? இல்லை, இது முழுப் பொய் என்றார்.