(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் எதிரணியில் இருந்துகொண்டும் அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றோம். எனவே எமது ஒத்துழைப்புகளை விளங்கிக்கொண்டு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.  

அத்துடன் எமது மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தடுக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடமும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரின் தேசியக்கொள்கைகள், பொருளாதார அலுவல்கள்,மீள்குடியேற்றம்,மற்றும் புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி,தொழிற்பயிற்சி,மற்றும் திறன்கள் அபிவிருத்தி,இளைஞர் அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்தார். 

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்று தமிழகத்தில் வாழ்ந்து வருபவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.