வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், கன்னியாகுமரி இளைஞர் ஒருவர் திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

வரும் ஏப்ரல் 18ம் திகதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல் கமிஷன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக, வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஓசரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவியர்,திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில், வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மணல் சிற்பம் ஒன்றை அமைத்து மக்களை கவர்ந்துள்ளார்.

3 லாரி மணலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தில், இந்திய பாராளுமன்றத்தின் முகப்புத் தோற்றம், அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் ‘எனது வாக்கு; எனது உரிமை’ எனும் ஆங்கில வாசகம் மற்றும் தேர்தல் கமிஷனின் சின்னம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த மணல் சிற்பத்தை பொதுமக்கள் பலரும் வந்து பார்வையிட்டதுடன், அதை தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து ஓவியர் கூறியதாவது; 

இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் மக்களுக்குச் சேவை செய்துவரும் எனக்கு, சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஆர்வம். அதன் தொடர்ச்சியாகத்தான், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறேன்.இது எனது 122வது படைப்பு.

லோக்சபா தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்களிடம் வலியுறுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு மணல் சிற்பம் வடிவமைக்க வேண்டும்’ என அதிகாரிகள் கேட்டிருந்தனர். அதன்படி, இதை உருவாக்கியுள்ளேன். இந்தச் சிற்பத்தை உருவாக்க 6 மணி நேரம் ஆனது. இதற்கு, எனது இரண்டு நண்பர்கள் பெரும் உதவி செய்தனர். ஓட்டுரிமை உள்ள அனைவரும், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.