இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டு தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் நான்காவது போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணியை பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் 39.2  ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து பதிலுக்கு 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 32.5 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக டீகொக் 51 ஓட்டத்தையும், ஹேண்ரிக்ஸ் 8 ஓட்டத்தையும், மக்ரம் 29 ஓட்டத்தையும், டூப்பிளஸ்ஸி 43 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், டேவிட் மில்லர் 25 ஓட்டத்துடனும், டுமினி 31 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில்  இலங்கை அணி சார்பில் தனஞ்சய டிசில்வா 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4:0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளது. இவ் விரு  அணிகளுக்கிடையேயான தொடரின் இறுதியும் ஐந்தாவதுமான போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி கேப் டவுன்னில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.