(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் அமைச்சரவை நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் நடைபெற்றது. 

இன்றைய தினம் ஜனாதிபதிக்கான அமைச்சு, பிரதமருக்கான அமைச்சு மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 24 அலுவலகங்கள் தொடர்பான குழுநிலை  விவாதம் இடம்பெற்றது. 

இதன்போது ஆரம்பத்தில் இருந்தே  ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கான செலவீன தலைப்பு மீது வாக்கெடுப்பு கோரி நிதி ஒதுக்கீட்டை குறைக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியிருந்தனர். 

அரசாங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு நிதி ஒதுக்கியும் ஜனாதிபதி செயலகம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றது, ஜனாதிபதி தனது தனிப்பட்ட பழிவாங்கலை முன்னெடுக்கின்றார் என்ற காரணிகளை கூறி ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான சரத் பொன்சேகா, ஹிருணிக்கா , முஜிபூர் ரஹ்மான், சமிந்த விஜயசிறி உள்ளிட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்டதுடன் ஜனாதிபதிக்கான செலவீன தலைப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். 

இந்த விடயத்தில் பிரதமர் எம்மீது கொவப்படக்கூடாது, எமக்கு மாற்று வழிமுறை இல்லை எனவும் தெரிவித்திருந்தனர். 

இதன் பின்னர் விவாதம் நிறைவுக்கு வந்த பின்னர் சபாநாயகர் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை  உறுப்பினர் சமிந்த விஜயசிறி வாக்கெடுப்புக்கு கோரினார். 

இதனை அடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய வாக்கெடுப்பு வேண்டுமா என சபை முதல்வர் லக்ஸ்மன்  கிரியெல்லவிடம் வினவினார். எனினும் இறுதி நேரத்தில் சபைக்குள் வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க  வாக்கெடுப்பு அவசியமில்லை நிறைவேற்றுங்கள் என கூறியதை அடுத்து சபை முதல்வரும்  அதனை வலியுறுத்தினர். 

அதன் பின்னர் ஜனாதிபதிக்கான செலவின தலைப்பின் மீது வாக்கெடுப்பு  கோரப்படாது நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் அதிருப்தியுடன் சபையிலிருந்து வெளியேறினர்.