“மக்களுக்கு, ‘மோடி ஜாக்கெட்’ மீதான மவுசு குறைந்து வருவதால், அதன் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது” என, அவுரங்காபாத் ஆயத்த ஆடை வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுவதும் நரேந்திர மோடி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதனால், அவர் சட்டையின் மேல் அணியும் ஆப்-ஜாக்கெட் உடையும் பிரபலம் ஆனது. அது, ‘மோடி ஜாக்கெட்’ என்ற பெயரும் பெறத் தொடங்கியது.

அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மோடி ஜாக்கெட் விற்பனையும் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் சமீப காலமாக, மோடி ஜாக்கெட் மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அதன் விற்பனை மந்தமாகிவிட்டதாகவும் ஆடை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், "கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது கடையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35க்கும் அதிகமான மோடி ஜாக்கெட் விற்பனை ஆனது. அதன்பின், விற்பனை எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது, வாரத்திற்கு ஒன்றுதான் விற்பனையாகிறது" என்றார்.

மற்றொரு வியாபாரியான மாலிக் சந்த் என்பவர் தெரிவிக்கையில், "ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் மோடி ஜாக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து வகையான ஆடைகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று வருத்தத்துடன் கூறினார்.