குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 5,000 ஆண்டு பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், கட்ச் பல்கலைக் கழகம் மற்றும் கேரளா பல்கலைக் கழகங்களின் தொல்லியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இங்குள்ள காடியா கிராமத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது, 250 கல்லறைகள் அடங்கிய மிகப் பெரிய மயான பூமி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மயான பூமி, 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து, கட்ச் பல்கலை.யின் தொல்லியல் துறை தலைவர் பேராசிரியர் சுரேஷ் பண்டாரி கூறியதாவது: “குஜராத் மாநிலத்தில் இருந்த கல்லறையில் இருந்து, 5,000 ஆண்டுகள் பழமையான, மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. மேலும், விலங்குகளின் எச்சங்கள், கிளிஞ்சல்களால் செய்யப்பட்ட வளையல்கள், மண் பாண்டங்கள் போன்றவை கிடைத்துள்ளன. இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.