தூத்துக்குடி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் மதிப்பிலான கடல் அட்டைகளை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சிலர் கடல் அட்டைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுதத்து,புதுக்கோட்டை பொலிஸார்  சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

பொலிஸாரைப் பார்த்ததும் அங்கிருந்த ஒரு கும்பல் தப்பி ஓடி விட்டனர். பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு,அரை டன் எடையுள்ள கடல் அட்டைகள் பாதி பதப்படுத்தப்பட்ட நிலையிலும், மீதி பதப்படுத்த தயார் நிலையிலும் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்ததுடன், அங்கு பதுங்கி இருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,பதப்படுத்திய கடல் அட்டைகளை கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடல் அட்டை கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.