(எம்.எப்.எம்.பஸீர்)

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொள்ளையிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்க்கப்பட்ட வைரக்கல்லாது உண்மையில் வைரம் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

மஹரகம பகுதியில் அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் பொலிஸ் குழு போன்று வேடமிட்டு அத்துமீறி நுழைந்து 700 கோடி ரூபா பெறுமதியான வைரம் மற்றும் மாணிக்கங்கள் கொள்ளையிடப்பட்ட நிலையில், அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

இந் நிலையில் இவ்வாறு மீட்க்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான 750 கரட் வைரக் கல் உண்மையில் வைரம் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த வைரம் எனக் கூறப்படும் கல்லை பேலியகொட மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபைக்கு அக் கல்லின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபருடன் எடுத்துச் சென்று நடத்திய  பரிசோதனைகளை அடுத்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. 

இதன்போது அக்கல்லை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள அந்த அதிகார சபையின் மூன்று விஷேட நிபுணர்கள் அடங்கிய குழு, குறித்த கல் வைரம் இல்லை எனவும் அது பளிங்கு கல் வகையினைச் சேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். 

எனினும் அதன் மேலதிக ஆய்வுக்கு குறித்த கல்லை சிறிது சேதப்படுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ள நிலையில் பொலிசார் அதற்கு இணக்கம் தெரிவிக்க மருத்ததையடுத்து மேலதிக ஆய்வுகள் இடம்பெறவில்லை என மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபை தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போது 500 கோடி ரூபா பெறுமதியான வைரம் எனக் கூறப்படும் குறித்த கல்லை மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.