(எம்.மனோசித்ரா)

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய நிலையானதும் உறுதியானதுமொரு அரசாங்கத்தை உறுவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஆகியன ஒன்றிணைய வேண்டும். இவ்விரு கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே கூட்டணியாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷவுக்கும் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

நிறைவேற்றதிகார முறைமையை நீக்குவதற்கு பூரண ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக உள்ளோம். தற்போது கனவிலேனும் ஆட்சியை கைப்பற்ற முடியுமா என்பதில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நிலையான உறுதியான ஒரு அரசாங்கத்தை அமைப்பதே நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும். அவ்வாறு உறுதியானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தனித்தனியாக பிரிந்து இதனை செய்ய முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.