போதை பொருட்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க யுத்தமொன்றையே ஆரம்பித்துள்ளார் என்று தான் கூற வேண்டியுள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இவரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைளையும் அதன் விளைவுகளையும் பார்க்கும் போது பல நுணுக்கங்களுடன் முன்னெடுக்கப்படும்  யுத்தம் போன்றே உள்ளது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் நாடெங்கினும் மொத்தமாக 556 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 6,650 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்புள்ளி விபரமானது அதிர்ச்சியையே உருவாக்கியுள்ளது .ஏனென்றால் கடந்த வருடம் முழுவதும் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது மொத்தமாக கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் அளவு 730 கிலோ கிராம்கள் மட்டுமே. மேலும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு மாதங்களில் மட்டுமே இந்தளவுக்கு ஹேரோயின் கைப்பற்றப்படுமாக இருந்தால் சரியான நகர்வுகளை முன்னெடுப்பதன் மூலம் எமது நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் கிலோ போதை பொருட்களை ஏன் கைப்பற்ற முடியாது என யோசித்த ஜனாதிபதி இந்த ஒப்பரேஷனுக்கு பொறுப்பாக உள்ள படையை உற்சாகப்படுத்தியுள்ளார். பொலிஸ் திணைக்களத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் அவர் கொண்டு வந்த பிறகே கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அப்படியானால் கடந்த காலங்களில் பொலிஸாரால் ஏன் இவ்வாறான நடவடிக்கைளை முன்னெடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுவது இயற்கையானதே.

“போதைக்கு எதிரான எனது செயற்பாடுகள் யுத்தத்தில் ஈடுபடுவது போன்றதே” என்று அவர் கூறுகிறார். போதை பாவனை, கடத்தல் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு அத்தண்டனையை நிறைவேற்றுதற்கான திகதியை கூட தீர்மானித்து விட்டதாக அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 18 பேரின் தண்டனை உறுதி

இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் 1299 பேர் உள்ளனர். இதில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 48 பேராவர். இதில் 30 பேர் தமது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். ஏனைய 18 பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த 18 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது என்று உறுதிப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார்.

அபுதாபியில் ஆரம்பித்த கைதுகள்

இவ்வருட ஆரம்பத்தில் அபுதாபியில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி உறுப்பினரும் போதை பொருள் வர்த்தகத்தில் தொடர்புடையவனுமாகிய மாக்கந்துரே மதூஷ் மற்றும் அவனது குழுவினரின் கைது சம்பவத்திற்குப்பிறகே இலங்கையில் பாரியளவான போதை பொருட்கள் மீட்கப்பட்டதுடன்  அதோடு தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஆகவே இத்தனை காலங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டே இவ்வர்த்தகத்தை கச்சிதமாக செய்து வரும் இலங்கையர்கள்,அவர்களுக்கு துணைபோயுள்ள அரசியல் பிரமுகர்கள் ,வர்த்தகர்கள் என ஒரு பெரிய வலைப்பின்னலின் ஆணிவேரை தேடி அறியும்  பயணமாகவே இது உள்ளது.

ஜனவரி பெப்ரவரி மாதங்களில்

இவ்வருடம் ஜனவரி மாதம்  கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் மற்றும் அதன் பெறுமதிகளை பார்த்தால் ௧௬ ஆம் திகதி கடுவலை கொத்தலாவல பகுதியில் 5 கிலோ கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் பெறுமதி 60.2 மில்லியன் ரூபாவாகும்.

22 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியவில் உள்ள சொகுசு மனை ஒன்றிலிருந்து 90 கிலோ கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டு அமெரிக்க பிரஜைகளும் அடங்குவர். இதன் பெறுமதி 108 மில்லியன் ரூபாவாகும்.

30 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கிரிபத்கொடையில் வைத்து 3 கிலோ ஹேரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அதே நாள் பிலியந்தலையில் வைத்து 110 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த ரத்மலான ரொகா என்பவர் ஒரு கிலோ கிராம்  ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

போதை தடுப்பு பிரிவினர்,பொலிஸார்,விசேட அதிரடி படையினர் ,கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ,பயங்கரவாத தடுப்புப்பிரிவு ,கலால் திணைக்கள் ஆகிய அனைத்துப்பிரிவினரும் மேற்கொண்ட தேடல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது ஜனவரி பெப்ரவரி மாதங்களில் 521கிலோ , 980 கிராம்,90 மி,கிராம் அளவு ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 6,857 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி 26 வரை 6,850 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாதம் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து மொத்தமாக 700கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 1 கிலோ கிராம் 154 கிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே வேளை  இரண்டு மாதங்களில் 126 கிலோ கிராம் ,335 கிராம்,453 மி.கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதோடு சம்பந்தப்பட்ட 6,833 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை முக்கி ய விடயம்.

கொக்கெய்ன்

இரண்டு மாதங்களில்  1 கிலோகிராம் 154 கிராம்,854 மி.கிராம் அளவு கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளதோடு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று 4கிலோ,471 கிராம், 390 மி.கி ஹசீஸ் எனப்படும் போதை பொருள் மீட்கப்பட்டதோடு 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களில் இவ்வளவு போதை பொருட்களும் கைதுகளும் இடம்பெற்றிருக்கின்றன என்றால் எதிர்வரும் காலங்களில் இது அதிகரிக்க சந்தர்ப்பங்கள் உள்ளன. போதை பொருட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே திடீர் கைதுகள் இடம்பெறுவதோடு பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது ஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம் வருவதற்கு முன்பதாக போதை பொருட்களை மீட்கும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் எந்தளவுக்கு அது மந்தமாக செயற்பட்டுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதில் பொலிஸ் திணைக்களத்தை மட்டும் குறை சொல்வதிலும் அர்த்தமில்லை. அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியவாதிகளை பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைளை முன்னெடுக்க பொலிஸாருக்கு அழுத்தங்கள் இருந்திருக்கலாம். எது எப்படியானாலும் போதைக்கு எதிராக ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் இந்த யுத்தம் வரவேற்கத்தக்கதொன்று எனக்கூறலாம் ஆனால் அதே போன்று இவரின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசியல் தளத்திலிருந்து கிடைத்து வரும் ஆதரவு குறைவு என்பதையும் இங்கு குறிப்பிடல் அவசியம்.

சிவலிங்கம் சிவகுமாரன்