அ.தி.மு.க. குறித்து தே.மு.தி.க.வின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததை மறப்போம் மன்னிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

“கோட்டைக்குள் நுளம்பு பறந்தாலும் தி.மு.க. புகார் மனு அளிக்கும். அவர்களுடைய சட்டத்தரணி அணிக்கு வேலை கொடுக்க வேண்டும்.

கட்சி கூட்டம் நடத்தவில்லை. கே. சி. பழனிச்சாமி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். மரியாதை நிமித்தமாக தலைமை செயலகத்தில் சந்தித்தார். அ.தி.மு.க. மிகப்பெரிய சமுத்திரம். அதில் ரி. ரி. வி. தினகரனை தவிர, யார் வேண்டுமானாலும் இணையலாம்.

37 மக்களவை உறுப்பினர்கள் இருந்ததால்தான் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வலுவாக குரல் எழுப்பி, பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். இந்திய வரலாற்றிலேயே அப்படி நடந்ததில்லை.

பிரேமலதா சொல்வதை முழுமையாக மறுக்கிறோம். கூட்டணியில் பங்கு பெற்றால் தான் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதில்லை.

நாங்கள் மாநில உரிமைகளுக்காக பலமுறை போராடி இருக்கிறோம், குறித்த விடயத்தில் பிரேமலதா சொல்வதை மன்னிப்போம். மறப்போம். அவர் தி.மு.க.வைத் தான் தில்லுமுல்லு கழகம் என்றார்.

அ.தி.மு.க.வை அப்படி சொல்லவில்லை. என்னைக் கேட்டால் தி.மு.க. தில்லுமுல்லுக் கழகம் தான்.” என்றார்.