இன்றைய திகதியில் எம்முடைய பிள்ளைகளில் பலர் அவர்களுக்குத் தெரியாமலேயே மனநலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். 

உதாரணத்திற்கு சில பிள்ளைகள் நாளொன்றுக்கு பலமுறை தங்களது இரு கைகளையும், கை மூட்டுகள் வரை சோப்பு போட்டு கழுவி கொள்வார்கள். அதனை சுத்தமான துணியால் துடைத்தும் கொள்வார்கள். முதலில் பார்க்கும் பொழுது, இது ஒரு ஆரோக்கியமான பழக்கமாக தெரியவரும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் இதனை ஒரு நாளைக்கு பலமுறை செய்வார்கள். 

அப்பொழுது அது நமக்கு குறையாக தெரியும். இதுகுறித்து அவர்களிடம் எடுத்துரைத்தால் நம் பேச்சை கேட்பதில்லை. இது தொடர்பாக ஏதேனும் உளவியல் சிகிச்சை தேவை என்று நாம் கருதி அவர்களை மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றால், முதலில் வர மறுப்பார்கள். பிறகு எமக்கு ஒன்றும் இல்லை என்று மறுப்பார்கள். அதனைத் தொடர்ந்து, தான் செய்வது தவறான செயல் அல்ல என்றும் விளக்கமும் கொடுப்பார்கள்.

இது போன்ற பிரச்சனைகளில் சிலர், சில தருணங்களில் அந்த சோப் தீரும்வரை கழுவுவார்கள் அல்லது கழுவி கழுவி அவர்களின் கை வெள்ளை பூத்து விடும் அளவிற்கு கழுவுவார்கள். ஒரு சில தருணங்களில் அவர்களுக்கே தெரியும். நாம் இதை செய்வது தவறு என்று. இருந்தாலும் அவர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர் இதனை ஒரு பெரிய விடயமாக கருதிக் கொள்ள மாட்டார்கள்.

எப்போது இதை ஒரு மனநல பாதிப்பு சார்ந்த விடயம் என்று எடுத்துக் கொள்ளவில்லையோ, அவர்கள் மன சிதைவு நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதனை நாம் அதாவது பெற்றோர்கள் ஆகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு தற்போது டீப் ரெஸ்ட் ஸ்டிமுலேஷன் ( Deep Rest Stimulation) என்ற சிகிச்சையும், பிரைன் ஸ்டிமுலேஷன் (Brain Stimulation) என்ற புதிய வகை சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கின்றன. உங்களது பிள்ளைகளை அருகிலுள்ள மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று, விளக்கமாகக் கூறி இத்தகைய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் நாளடைவில் இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடுவார்கள்.

டொக்டர் விஜயலட்சுமி

தொகுப்பு அனுஷா.