பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களின் தொலைபேசி எண்ணில் ஜெயலலிதா குரலில் தேர்தல் பிரசார ஓடியோ மூலம் வாக்கு சேகரிக்க அ.தி.மு.க. ஏற்பாடு செய்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தேர்தல் வியூகம் ஆகியவற்றில் தீவிரமாக உள்ளன.

 தேர்தல் திகதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரசார யுக்திகளை ஒவ்வொரு கட்சியும் ஆராய்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியும் வருகிறார்கள்.

கட்சி தலைவர்களின் குரலை பதிவு செய்து அதை பொதுமக்களின் தொலைபேசி  எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் சமூக வலைதளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் அவரது குரலை வாக்காளர்களின் தொலைபேசி  எண்ணுக்கு அனுப்பி பிரசாரம் செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் குறித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.

குறித்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் குரல் பதிவு தொழில் நுட்பத்தை அ.தி.மு.க. மேலும் மேம்படுத்தி இருக்கிறது. அதில் வாக்காளர்களின் தொலைபேசி  எண்ணுக்கு வரும் ஜெயலலிதா குரல் பிரசார ஓடியோவில், குறித்த தொலைபேசி  எண்ணுக்கு உரியவரின் பெயரை அழைத்து வாக்கு கேட்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது.