யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி இன்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

இரு கல்லூரி அணிகளுக்குமிடையிலான 113 ஆவது வடக்கின் போர் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

3 நாட்கள் இடம்பெறும் போட்டி, நேற்றைய தினம் ஆரம்பமானது. இப்போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 46.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 2 ஆவதாக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 79.2 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 இந்நிலையில் இன்றைய தினம் தனது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர முடிவில் எவ்வித விக்கெட் இழப்புகள் இன்றி 39 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 121 ஓட்டங்களைப் பெற்று 107 ஓட்டங்களால் முன்னிலைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக ஆரம்பதுடுப்பாட்ட வீரர்களான சௌமியன் 104 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களுடனம் தனுஜன் 132 பந்துளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களைப் பெற்று களத்திலுள்ளனர்.

நாளைய தினம் இரு அணிகளின் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் 3 ஆவது இறுதிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.