வடகொரியாவின் நடவடிக்கைகளை எண்ணி மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தனது முக்கிய ஏவுகணை தளத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடகொரியா தனது ஏவுதளத்தை புனரமைப்பது குறித்த செய்தி உண்மையாக இருந்தால், அது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும், மேலும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து வருகின்றேன்.

வடகொரியாவுடன் சிறந்த உறவு காணப்படுகின்றது. கிம்மின் நடவடிக்கை எவ்வாறு அமைய போகின்றது என்பதை பொறுமையுடன் அவதானித்து வருகின்றேன்“ என குறிப்பிட்டுள்ளார்.