முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெறும் பந்தலுக்கு முன்பாக இன்றைய தினம் காலை 11 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரி ஆரம்பித்த இந்த தொடர்  போராட்டம்   முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பித்த நிலையில் இன்றுடன் இந்த போராட்டத்துக்கு இரண்டு வருடங்கள் நிறைவடைந்து மூன்றாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் இன்றையதினம் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓமந்தையில் கையளித்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? இறுதிப்போரின் போது வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே? சர்வதேசமே எமக்கு நீதி கூறு,கால நீடிப்பு எம் கண்ணீருக்கு தீர்வாகுமா ? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

வடக்கு கிழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக பல மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வருவதாகவும் முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இரண்டு வருடங்களை தொட்டு உள்ளதாகவும் இதுவரை தமக்கு எந்த நீதியும் வழங்கப்படவில்லை எனவும் இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட பலர் இந்த  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் இறந்துள்ளனர் என தெரிவித்தனர்.

எனவே தற்போது இடம்பெற்றுவரும் நாற்பதாவது ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் தமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறித்த பிரச்சனை பேசப்பட வேண்டும் எனவும் இந்த பிரச்சனையை ஒரு பிரதான பொருளாக எடுத்து இங்கிருந்து செல்பவர்கள் அதனை அங்கு கூற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு வருடங்கள் கால நீட்டிப்பை இலங்கை அரசாங்கத்துக்கு ஐநா வழங்கக் கூடாது எனவும் அவ்வாறு வழங்குவதால் தமது போராட்டம் இன்னும் மழுங்கடிக்கப்படும் எனவும் தமக்கு இன்னும் நீதி கூறுவதற்கான இந்த முயற்சிகள் தடைபடும் எனவும் தாம் தொடர்ந்தும் இவ்வாறு வீதியில் போராடி மடியவேண்டிய நிலை மோசமாகும் எனவும் ஆகவே  இலங்கை அரசாங்கத்துக்கு இனியும் கால நீட்டிப்பை சர்வதேசம் வழங்கக்கூடாது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.