கஜா புயலில் மரம் விழுந்து இறந்த தந்தையின் இறுதிச் சடங்கு செலவுக்காக, 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 10 வயது சிறுவன், மூன்று மாதங்களுக்கு பின் 'சைல்டு லைன்' அமைப்பு மூலம் மீட்கப்பட்டார்.

இது குறித்து தெரியவருவதாவது, 'தமிழகத்தின், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் மேலவன்னிப்பட்டு கிராமத்தில், சுமார் 10 வயது சிறுவன் ஒருவன் கடந்த 3 மாதங்களாக ஆடு மேய்த்து வருகிறான். அந்தச் சிறுவனை, இதற்கு முன்னர் இப்பகுதியில் பார்த்ததில்லை’ என்று, மாவட்ட 'சைல்டு லைன்' அமைப்புக்கு இரகசிய தகவல் வந்ததுள்ளது.

இதையடுத்து, தொழிலாளர் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று, அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன், பட்டுக்கோட்டை  அருகேயுள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா என்பதும், மகாலிங்கம் என்பவரிடம் கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சூர்யாவை மீட்ட அதிகாரிகள் அவனிடம் மேலும் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய 'கஜா' புயலின்போது, மரம் முறிந்து விழுந்ததில் தந்தை நடராஜன் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு செலவுகளுக்காக, பொட்டலங்குடியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடம், சூர்யாவின் தாய் சித்ரா 6 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்று, மகனை கொத்தடிமையாக விற்றதும் தெரிந்தது.

மீட்கப்பட்ட சிறுவன் சூர்யாவுக்கு உடனடி நிவாரணமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்து கல்வி மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.