- கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மனதிற்கொண்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள்  எற்பாடுகளையும் தந்திரோபாய நகர்வுகளையும் செய்துகொண்டிருக்கின்றன. அத்தகைய நகர்வுகளில் ஒன்றுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  நன்கு பிரபல்யப்படுத்தப்பட்ட கடந்த மாத வடக்கு விஜயம்.தமிழர்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் கணிப்பீடுகளாக இருக்கின்றன. இருக்கவேண்டும். 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியில் முஸ்லிம் வாக்குகள் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பதை மிக நன்றாக உணர்ந்துகொண்டவராக ஸ்ரீலங்கா பொதுஜனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முஸலிம் குழுக்களைச் சந்தித்துவருகின்றார்.இதனால், நாம் ஏற்கெனவே தேர்தல் காலத்திற்குள் பிரவேசித்துவிட்டோம் என்றாகிறது.புதிய பட்ஜெட்டும் இந்த யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

அதேவேளை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறுபட்ட வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார். ஒரு பதவிக்காலத்துக்கான ஜனாதிபதி என்று ஜனாதிபதியாக பதவியேற்ற ஆரம்பநாட்களில் தன்னை பகிரங்கமாக அறிவித்தபோதிலும், அவர் இப்போது இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறார். இந்த குறிக்கோளை மனதிற்கொண்டவராகவே அவர் கடந்த வருடம் அக்டோபரில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கினார். அந்த திட்டம் சரிவரவில்லை.இரு மாதகாலத்திற்குள் பழைய நிலைமைக்கு இலங்கை திரும்பியது.அக்டோபரில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதற்கு அவர் எடுத்த தீர்மானம் அடுத்த  தடவை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் தனக்கு கிடைக்கப்போவதில்லை என்ற உண்மையின் தாக்கத்தின் விளைவானதாகும்.

இந்த திரிசங்குநிலை மற்றைய கட்சிகளின் வாக்குகளை நாடுவதற்கு சிறிசேனவை நிர்ப்பந்தித்திருக்கிறது. இயல்பான தெரிவு  பொதுஜன பெரமுனவே.

அதனால், ஊடக செய்திகள் உறுதிப்படுத்தியிருப்பதைப் போன்று  தன்னை ஜனாதிபதி வேட்பாளராகக்கொண்டு கூட்டணியை  அமைக்க பொதுஜன பெரமுனவை அவர் இழுக்கிறார். பதிலுக்கு பொதுஜன பெரமுனவும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதியுடன் சந்திப்புகளையும் கலந்தாலோசனைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது.

சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராகக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணியொன்றை அமைப்பது சாத்தியமா? கண்டிப்பாக சாத்தியமில்லை என்பதே இந்த கேள்விக்கான பதிலாகும்.ஆனால், இந்த விடயத்தில் சிறிசேனவுடன் பொதுஜன பெரமுன ஏன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது? பிரதான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை தடுப்பதில் அவருக்கு இருக்கும் வல்லமையின் காரணமாகவா?

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினர் சகலரும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களினால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கங்களின் அடிப்படையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றே கருதவேண்டியிருக்கிறது.அந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மொத்த வாக்குகளில் 44.69 சதவீதத்தைப் பெற்றது.சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மொத்த தேசிய வாக்குகளில் 13.38 சதவீதத்தையே பெறக்கூடியதாக இருந்தது.

ராஜபக்ச முகாம் கடந்த ஒரு வருடத்தில் புதிய வாக்குகளை தனதாக்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று எதுவும் இல்லை.பதிலாக, 2018 பிற்பகுதியில் மூண்ட அரசியல் நெருக்கடியின்போது பொதுஜன பெரமுனவும் அதன் நேச அணிகளும் நடந்துகொண்ட முறை காரணமாக சில வாக்குகளை இழந்திருக்கக்கூடும்.அந்த அரசியல் நெருக்கடி ஐக்கிய தேசிய கட்சிக்கு புத்தூக்கத்தைக் கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை. அந்த கட்சியில் இருந்து பிரிந்துசென்றவர்களில் சிலர் 2018 பிற்பகுதியில் திரும்பிவந்திருக்கவும் கூடும்.

மறுபுறத்தில், உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழ்க்கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் தனக்கு கிடைக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சி கணிப்பிடவும் கூடும். இந்த வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறுவதற்கு போதுமானவை என்று எவரும் கூறமுடியாது. சிங்கள பெரும்பான்மை பகுதிகளில் அக்கட்சி எந்தளவுக்கு வாக்குகளைப் பெறுகிறது என்பதிலேயே அதன் வெற்றிவாய்ப்பு பெருமளவுக்கு தங்கியிருக்கிறது.

சுதந்திர கட்சியுடன்  ( ஜனாதிபதி சிறிசேனவுடனும் ) கூட்டு ஒன்று இல்லாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான 50 சதவீத வாக்குகள் + 1 வாக்குகளுக்கு 5 சதவீதம் குறைவாக பொதுஜன பெரமுன பெரமுன அதன் சுமார் 45 சதவீத வாக்குகளையே உறுத்துநோக்கிக்கொண்டேயிருக்கவேண்டும். எனவே, சுதந்திர கட்சியின் வாக்குகளிலும் ஜனாதிபதியுடனான கூட்டணியிலும் பொதுஜன பெரமுன அக்கறை கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐந்து சதவீத வாக்குகளுக்காக அந்த கட்சி " வெற்றிக்கிண்ணத்தையே " தியாகம் செய்யுமா என்பதே முக்கியமான கேள்வியாகும். வாக்காளர் பலத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையிலான கூட்டணியொன்றில் பலாபலன்களில் அதிகூடுதல் பகுதி பொதுஜன பெரமுனவுக்கே செல்லவேண்டும். இதனால் சிறிசேனவை பொது வேட்பாளராக பொதுஜன பெரமுனவை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக பொதுஜன பெரமுன பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் அண்மைக்கால அனுபவமாகும். தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதி மீது பொதுஜன பெரமுனவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் விருப்புவெறுப்புகளுக்கும் நிகழ்ச்சிநிரலுக்கும் எதிராக சிறிசேன போகமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது மிகவும் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி கற்றுக்கொண்ட கசப்பான பாடமாகும்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதென்ற ஜனாதிபதி சிறிசேன தீர்மானம் பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றிவாய்ப்புக்களைக் கணிசமானளவுக்கு குறைக்கும்.ஏனென்றால், அது பொதுஜன பெரமுனவுக்கு அவசியமான சிறியதொரு எண்ணிக்கை வாக்குகளை எடுத்துச்செனறுவிடும். இதனால், பொதுஜன பெரமுனவின் ஆதரவில்லாமல் சிறிசேன தேர்தலில் போட்டியிடுவாரானால் , இறுதியில் பொதுஜன பெரமுனவின் வெற்றிவாய்பப்பை தடுக்கக்கூடிய ஒருவராக வந்துவிடக்கூடும். எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியொன்றை அமைக்க சிறிசேன நாட்டம் காட்டும்போது அங்கே பொதுஜன பெரமுன தனக்கு வாய்ப்பைத் தராவிட்டால் அதன் வெற்றிவாய்ப்பை தடுக்கக்கூடிய வல்லமை தனக்கு இருக்கிறது என்ற அச்சுறுத்தலையும் உள்ளார்ந்தமாக விடுக்கிறார் என்பதை கவனிக்கத்தவறக்கூடாது.

இதை மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது.அதன் காரணத்தினாலேயே சிறிசேனவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டுவருகிறார்.ஜனாதிபதியுடன் இந்த விவகாரங்களைக் கையாளுகின்ற விடயத்தில் பொதுஜன பெரமுன பிரத்தியேகமான இரு குறிக்கோள்களை சாதிக்கவேண்டிய தேவை இருக்கிறது. (1) ஜனாதிபதியைப் பகைத்துக்கொள்ளக்கூடாது (2) சுதந்திர கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி போட்டியிடுவதை தடுக்கவேண்டும்." பேச்சை நடத்துவது, ஆனால் விட்டுக்கொடுப்பதில்லை" என்பதே இன்றைய கட்டத்தில் பொதுஜன பெரமுனவின் தந்திரோபாயமாக பெரும்பாலும் இருக்கிறது போலும்.

ஜனாதிபதியுடன் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருக்கின்ற அதேவேளை தன்னை  ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகக்கொண்டு கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற அவரின் கோரிக்கைக்கு விட்டுக்கொடுக்காமல் பொதுஜன பெரமுன தற்போது  நடந்துகொள்வதில்  இருந்து இந்த  தந்திரோபாயத்தை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில்  ஜனாதிபதியுடனான சுமுக உறவுகளை எவ்வளவு காலத்துக்கு பொதுஜன பெரமுனவினால் பேணக்கூடியதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.ஜனாதிபதி சிறிசேன எவ்வாறு தனது பிதிபலிப்புகளை வெளிப்படுத்துவார் என்பதை எவராலும் முன்கூட்டியே ஊகிக்கமுடியாது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை அமைக்காமல் சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ஊக்குவிப்பதில் ஐக்கிய தேசிய கட்சி காட்டக்கூடிய அககறை பொதுஜன பெரமுன மீதான நெருக்குதல்களை மேலும் சிக்கலாக்கும்.தனியாக போட்டியிடுமாறு ஜனாதிபதியை தூண்டுவதற்காக அவருடன் ஐக்கிய தேசிய கட்சி  சினேகபூர்வமாகவும் இருக்கவேண்டும்.

சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுன கூட்டணியொன்று தொடர்பில் சாத்தியமானது என்ன? ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதறாகான வாய்ப்பை சிறிசேனவுக்கு விட்டுக்கொடுக்காமல் கூட்டணியை அமைக்கும் முடிவுக்கு பொதுஜன பெரமுன வரவேண்டுமானால், அது வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவை எற்படும். பல தெரிவுகள் இருக்கின்றன.2020 ஆம்ஆண்டில் தேசியத் தேர்தல்களில் கூட்டணி வெற்றிபெற்றால் பிரதமர் பதவியை சிறிசேனவுக்கு விட்டுக்கொடுப்பதாக உறுதியளிப்பது அத்தகைய சலுகைகளில் ஒன்றாக பெரும்பாலும் இருக்கும் .மூன்னள் ஜனாதிபதிகள் பிரதமர்களாக வருவதை ஏற்றுக்கொள்ள இலங்கையர்கள் தங்களை இசைவாக்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. இரு கட்சிகளுக்கும் இருக்கக்கூடிய தெரிவுகளில் ஒன்று இதுவாகும்.

பிரதான வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்புக்களைத் தடுப்பதில் சிறிசேனவுக்கு இருக்கக்கூடிய வல்லமையில் விளைவாக உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை பொதுஜன பெரமுன எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். சிறிசேனவின் தீர்மானங்களைப் பொருட்படுத்தாமல் பொதுஜன பெரமுன தனது எண்ணப்படி தேர்தலில் போட்டியிடுமா? சுதந்திரக் கட்சியின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் செயற்படுவதற்கு  போதுமான துணிச்சல் பொதுஜன பெரமுனவுக்கு இருக்கிறதா? கூடியவிரைவில் இதை நாம் தெரிந்துகொள்வோம்.