வவுனியாவில் நேற்று பிற்பகல் கற்குழிப்பகுதியில் சட்டவிரோத மாவா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று பிற்பகல் கற்குழி புகையிரதக்கடவைக்கு அருகில் மாமடுவ பகுதியைச் சேர்ந்த 32வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 820கிராம் பொதி செய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். 

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினர் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கையின்போது போதைப் பொருட்கள் வியாபாரி ஒருவரிடமிருந்து மாவா போதைப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு சென்ற குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.