ஆப்கானிஸ்தானில் இன்று காலை கட்டுமான நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்திற்கு அருகே கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். பின்னர், சில பயங்கரவாதிகள் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். 

குறித்த தாக்குதல் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆரம்பித்து 10.30 மணி வரை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  குறித்த தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

குறித்த தாக்குதலை 5 பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இவர்களில் 2 பேர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். மற்ற 3 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தாக்குதல் நிறைவடைந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை குறைக்கும் வகையில் பொலிஸார்  தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.