ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய ரயில்வே திணைக்களம் பாதையையும் தடை செய்துள்ளது

வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி தற்போது அகற்றப்பட்டுள்ளது. அப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு தண்டவாளம் போட்டு போக்குவரத்து மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு பாதுகாப்பு வேலி இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்புடன் அமைத்துக்கொடுக்கப்பட்டு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, புளியங்குளம் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரினால் திறந்து மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அப்பாதையில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு வேலியை உடனடியாக அகற்றுமாறு கோரி பிரதேச செயலாளர், ஈஷி மிஷன் ஆயலத்தின் பிரதான பிஷப், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கு எதிராக வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய நிலையில் கடந்த 5ஆம் திகதி வவுனியா ரயில்வே திணைக்களம் பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியை மக்களின் பயன்பாட்டிலிருந்த ரயில் பாதையை மக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டு இரு பக்கமும் தண்டவாளம் இட்டு தடை அமைக்கப்பட்டு முற்றாக மக்களின் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான காரணமாக அப்பாதை ரயில்வே திணைக்களத்திற்குள் உள்வாங்கப்படவில்லை அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தமிழ் தெற்கு பிரதேச சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு விண்ணப்பம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலி கோகிலகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கும்போது, 

குறித்த வீதி 50வருடகாலமாக மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிலிருந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலரிடம் கோரிக்கை விடுத்தும் அப்பகுதிக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை தற்போது அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியையும் அகற்றிவிடுமாறு கோரியுள்ளதுடன் எமது பயன்பாட்டிலுள்ள  பாதையை தற்போது ரயில்வே திணைக்களத்தினால் தண்டவாளம் இட்டு தடை செய்துள்ளதால் அப்பகுதி மக்களின் உரிமையை மீறிய செயலாகும் என்றும் இச் செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.