இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்தோர் தொடர்பான ஆட்க்கொணர்வு  மனுமீதான விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட  ஆட்கொணர்வு மனுமீதான இரண்டாம் கட்ட வழக்கு  விசாரணைகள் இன்றையதினம் விசாரணைக்காக முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தளபதிகளில் ஒருவரான எழிலன் உள்ளிட்ட  11 பேர்  தொடர்பான   ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணைகள் கடந்த சில  வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட  .நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில் எழிலன் உள்ளிட்ட ஐந்துபேர் தொடர்பான ஆட்க்கொணர்வு  வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் மிகுதியாக உள்ளவர்களின் வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட  நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது .

இந்நிலையில் இன்றையதினம் வழக்கு இலக்கம் 517 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆட்கொணர்வு  மனுதாரர் தனது மகன் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான  தனது சாட்சியத்தை  மன்றுக்கு தெரிவித்தார் . அதாவது தனது  மகன் இறுதிப்போரின்போது வட்டுவாகல் பகுதியில் காயமடைந்த நிலையில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டார் என்றும் பின்னர் தனது  மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் எனவும்  இதுவரையில் தனது மகனை காணவில்லை எனவும் மன்றுக்கு சாட்சியம் அளித்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கபடவேண்டிய ஆவணங்களின் மூலப்பிரதிகள் வழங்குவதற்காக இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

இந்தவழக்கில் மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே .எஸ் ரத்னவேல் அவர்கள் மன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தார் .