நாட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் இரண்டு உயிரிழப்புகளும் இடம் பெற்றுள்ளன. மக்கள் மாத்திரமின்றி காட்டில் வாழும் மிருகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இயற்கையின் பாரிய மாற்றம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கும் கடுமையான உஷ்ணமான காலநிலை நிலவும் என இலங்கை வானிலை அவதானத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த நான்காம் திகதி முதல் பதினான்காம் திகதி வரையில் இலங்கைத் தீவில் சூரியன் உச்சம் கொடுப்பதே இதற்குக் காரணமாகும். சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும்.
கடுமையான வெப்பம் காரணமாக உடலின் நீரிழப்பு ஏற்பட்டு, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்படும். சிலவேளைகளில் மரணம் கூடச் சம்பவிக்கும். வெயில், வெப்பம், புழுக்கம் எனப் புலம்பிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து அதிகரித்த வெப்பத்தைச் சமாளித்து அதன் காரணமாக ஏற்படும் உபாதைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும்.
உணவு, உடை மாற்றத்துடன் கிரமமான யோகாவில் ஈடுபட அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் உபாதைகளைத் தவிர்க்க முடியும்.
உடலின் சீரான செயற்பாட்டிற்குத் தண்ணீர் மிக அவசியம். அதிகரித்த வெப்பம் காரணமாக வியர்வை மூலம் நீர் இழக்கப்படுகிறது. நீர் அதிகம் தேவைப்படும் உறுப்பு மூளையாகும். நீரிழப்பு காரணமாக மூளைக்குப் போதியளவு நீர் கிடைக்காமையாலேயே மூளை செயலிழந்து மயக்கம் ஏற்படுகிறது.
காலையில் எழுந்ததும் ஒன்றரை லீற்றர் சுத்தமான நீரைப் பருக வேண்டும். நீரை ஒரேயடியாக விழுங்காமல் வாயினுள் சிறிது நேரம் வைத்து இருந்து உமிழ் நீருடன் விழுங்க வேண்டும். நீர் பருகிய நாற்பது நிமிடங்களுக்குப் பின்பே தேநீர் பருக வேண்டும். தண்ணீர் விடாய் என்பது உடல் நீருக்காக ஏங்கும் அறிகுறியாகும். எனவே, விடாய் ஏற்படும் வரை காத்திருக்காமல் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை நீர் பருக வேண்டும். போத்தலில் அடைத்த மென்பானங்கள், சாறுகளைத் தவிர்க்க வேண்டும். குளிரூட்டிய நீரைத்தவிர்க்க வேண்டும்.
முதல் நாள் இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதனை அடுத்த நாள் காலையில் வடிகட்டி எடுத்த தண்ணீரை மட்டும் அருந்தி வந்தால் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் உடல் தெம்பாகவும் இருக்கும். அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் உடல் குளிரூட்டப்படுவதோடு ஆரோக்கியம், வலிமை, இளைமை போன்றவையும் மேலோங்கும். வெப்பமான காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலும் வெந்நீரைத் தவிர்த்து குளிர்ந்த நீரில் குளிப்பது நன்மை தரும்.
நாம் உட்கொள்ளும் குறிப்பிட்ட சில உணவுகளும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். பருப்புடன் ஏதாவது ஒரு கீரையைச் சேர்த்துக் கூட்டு செய்து உட்கொண்டால் உடல் உஷ்ணம் குறையும். கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட வெப்பம் காரணமாக ஏற்படும் தலைவலி குணமாகும்.
கீரைத் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போட்டால் வேர்க்குரு, கைகால் எரிச்சல், மூத்திரஎரிச்சல் போன்ற உபாதைகள் குணமாகும்.
கறுப்பு அல்லது கடுமையான வர்ண ஆடைகளை அணியாமல் வெள்ளை அல்லது மெல்லிய நிற ஆடைகள் அணிவதால் சூரிய வெப்பத்தின் தாக்கம் குறையும். தலையில் அணியும் தொப்பி பருத்தியால் தயாரித்ததாக இருக்க வேண்டும். அணியும் உடைகளும் பருத்தியால் தயாரித்ததாக இருக்க வேண்டும். செயற்கை இழைத்துணிகளைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது.
வெளியில் போவதென்றால் இயன்ற வரை காலை அல்லது மாலை நேரங்களில் போக வேண்டும். மதியம் பன்னிரெண்டு மணி முதல் மூன்று மணிவரையான காலத்தில் உஷ்ணம் மிகவும் அதிகமாகக் காணப்படுவதால் அந்நேரம் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகரித்த வெப்பத்தினால் கண்கள் பாதிக்கப்படுவதால் வெளியில் செல்லும் போது உயர்ந்த ரக கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
தலை உச்சியில் சூடேறும் படி விட்டு விடக்கூடாது. எனவே சிறிது சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையை இலேசாக உச்சியில் தடவிக் கொள்ள வேண்டும்.
வெப்பமான நேரங்களில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபட்டால் அதிக நீரிழப்பு ஏற்பட்டு உபாதைகள் தலைதூக்கும். மின் விளக்குகளிலிருந்து அதிக வெப்பம் வருவதால் தேவையில்லாத போது விளக்கை அணைக்க வேண்டும். வீட்டுக்குள் உஷ்ணமாக இருந்தால் அடிக்கொரு முறை தரையில் சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும். சற்று குளிர்ச்சியாக இருப்பதை உணரலாம். வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனேயே தண்ணீர் அருந்தக் கூடாது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்புதான் தண்ணீர் அருந்த வேண்டும்.
சிலருக்குப் பித்தம் இருந்தால் இந்த அதிகரித்த வெப்பத்தில் வெளியில் சென்று அலைந்தால் மயக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடிக்கடி இளநீர், நுங்கு, மோர் போன்றவற்றைப் பருக வேண்டும். தயிர், பழவகைகள் சாப்பிடவேண்டும்.; அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும். வெந்தையத்தை பொடி செய்து மோரில் கலந்து பருக உடனடியாக உடல் உஷ்ணம் குறையும்.
மேல் குறிப்பிட்டவையோடு யோகாவில் கிரமமாக ஈடுபட அதிகரித்த வெப்பத்தால் ஏற்படும் உபாதைகள் தடுக்கப்படும். குறிப்பிட்ட சில ஆசனங்கள் பிராணாயாமம், முத்திரை போன்றவை உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் வலிமை கொண்டவை.
?????, ஹலாசனம், தனூராசனம், மச்சாசனம், உட்கட்டாசனம், சாந்தியாசனம் போன்ற ஆசனங்களைக் கிரமமாகச் செய்து வர கடுமையான வெப்பத்தின் தொல்லை இல்லை எனலாம். இவை தவிர சீதள பிராணாயாமம் என அழைக்கப்படும் மூச்சுப் பயிற்சிகளான சீத்தளி, சீத்தகாரி, சதந்தா போன்ற உடலைக் குளிர்ச்சிப் படுத்தக் கூடிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
????? – ஹலாசனம்
விரிப்பில் மல்லாக்கப்படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக இரண்டு கால்களையும் மேலே செங்குத்தாக உயர்த்தி இரண்டு கைகளாலும் இடுப்புப் பகுதியை தாங்கிப் பிடிக்கவும். கால் விரல்களை கண்களுக்கு நேரே இருக்கும் படி வைத்துக் கொள்ளவும். இந்நிலையில் சாதாரண மூச்சில் குறைந்தது 200 எண்ணிக்கை இருக்கவும். சர்வரோக நிவாரணி, மார்க்கண்டேயர் ஆசனம் எனவும் இவ்வாசனத்தை அழைப்பர். சகல நோய்களையும் குணப்படுத்தும் வலிமை கொண்ட இந்த ஆசனம் முதுமையடைதலைப் பின்போட்டு இளமையைப் பாதுகாக்கும் சக்தியும் கொண்டது.
இவ்வாசனத்தில் இருந்தவாறு இரண்டு கால்களையும் மெதுவாகப் பின்புறம் சாய்த்து கால் விரல்களால் நிலத்தைத் தொடுவதே ஹலாசனமாகும். இந்த ஆசனத்தை 50 எண்ணிக்கை வீதம் மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.
தனூராசனம்
விரிப்பில் குப்புறப்படுத்துக் கொண்டு மெதுவாக இரண்டு கால்களையும் மடக்கிப் பிடித்துக் கொண்டு மூச்சை உள் இழுத்தவாறு மேலே உயர்த்தவும். முடிந்த அளவு தலையையும் மேலே உயர்த்தவும். மூச்சை அடக்கியவாறு இந்நிலையில் 20 எண்ணிக்கை இருக்கவும்.
மச்சாசனம்
கால்களை மடக்கிப் பத்மாசனத்தில் அமர்ந்து பின்புறம் மெதுவாக சரிந்து உடலை வளைத்து உச்சந்தலையை நிலத்தில் வைக்கவும். இரண்டு கைவிரல்களாலும் கால்களின் பெருவிரலைப் பிடிக்கவும். ஆழமாக உள் இழுத்து வெளிவிட்டவாறு குறைந்தது 10 மூச்சுக்கள் எடுக்கவும்.
உட்கட்டாசனம்
கால்களை அகட்டியவாறு விரிப்பில நிற்கவும். பின்னர் கதிரையில் உட்கார்ந்து இருப்பது போல கீழே போகவும். கைகள் இரண்டும் தோள்ப்பட்டைக்கு நேரே நீட்டியவாறு இருக்க வேண்டும். இந்நிலையில் 60 எண்ணிக்கை இருக்கவும். பின் மூச்சை உள் இழுத்தவாறு மேலே வந்து நின்று, மீண்டும் கீழே போய் ஆசனத்தில் இருக்கவும். இவ்வாறு மூன்று தடவைகள் செய்ய வேண்டும். வெப்ப காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது. எனினும், இவ்வாசனத்தில் 60 எண்ணிக்கை இருக்க ஒரு மைல் தூரம் மேற்கொண்ட நடைப் பயிற்சியின் பயன்கள் கிடைக்கும்.
எவ்வளவு நேரம் யோகா ஆசனங்களில் ஈடுபட்டாலும் முடிவில் சாந்தியாசனம் (???வாசனம்) செய்தால்தான் ஆசனங்களின் பலன்கள் முழுமையாகக் கைகூடும்.
சாந்தியாசனம் (சவாசனம்)
விரிப்பில் மல்லாக்கப்படுத்து, கண்களை மூடியவாறு முகம் மேல் நோக்கி இருக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சு மூன்று தடவைகள் எடுக்கவும். உடல் உள் உறுப்புக்களை நினைத்தவாறு குறைந்தது ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் போது உடலிலும் மனதிலும் ஒருவகை அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.
குறிப்பிட்ட சில குளிர்ச்சிப் பிராணாயாமப் பயிற்சிகள் மூலம் உடலைக் குளிரப்பண்ண முடியும். தடிமன், குறைந்த இரத்த அழுத்தம், சுவாசப்பை உபாதைகள் போன்றவற்றால் பீடிக்கப்பட்டோர் குளிர்ச்சிப் பிராணாயாமத்தைத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சிப் பிராணாயாமத்தில் ஈடுபடும் போது உடல் முழுவதும் குளிர்வதை உணர முடியும். தண்ணீர் விடாய் அகலும்; பசியைத் தணிக்கும். வரட்சியடைந்த வாயினுள் ஈரத்தன்மை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் குறையும். வெப்பம் காரணமாக ஏற்படும் அஜீரணம் அகலும். தோலில் ஏற்பட்ட உபாதைகள் அகலும். மன உளைச்சல் நீங்கி சந்தோசம் மேலோங்கும்.
குளிர்ச்சிப் பிராணாயாமம்
சீதளி
வஜ்ஜிராசனம் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளிலும் சின் முத்திரையிட்டு முழங்கால்கள் மேல் வைத்திருக்கவும். நாக்கை வெளியே நீட்டிக் குழல் போன்று சுருட்டி அதனூடாக மூச்சை ஆழமாக உள் இழுக்க வேண்டும். மூச்சை சில வினாடிகள் அடக்கி வைத்திருக்க வேண்டும். காற்றை குழல் வழியாக உள்ளே இழுக்கும் போது காற்று வாய்தொண்டை வழியாகக் குளிர்ந்தவாறு சுவாசப்பைகளைச் சென்றடைவதை உணர முடியும்.
சில வினாடிகள் காற்றை அடக்கி வைத்திருந்து வாயை மூடிக் கொண்டு நாசிகள் வழியாக மெதுவாக வெளிவிடும் போது வெப்பமாக வெளியேறுவதை உணர முடியும். இது போன்று பத்து முறைகள் செய்யவும்.
சீத்தகாரி
மேலேயே விபரித்தபடி உட்கார்ந்து இருந்து நாக்கைக் கீழ்ப் பக்கம் வளைத்து துணியைக் கீழ் வரிசைப் பற்களின் உட்பக்கம் வைக்கவும். வாயின் பக்க வாட்டின் வழியாக மூச்சை உள் இழுத்துச் சில வினாடிகள் அடக்கி வைத்திருக்கவும். காற்றை உள் இழுக்கும் போது குளிர்ந்தவாறு சுவாசப்பைகளைச் சென்றடைவதை உணர முடியும். மெதுவாகக் காற்றை நாசி வழியாக வெளிவிடும் போது வெப்பமாக இருப்பதை உணரமுடியும். இவ்வாறு பத்து தடவைகள் செய்யவும்.
சதந்தா
மேலேகுறிப்பிட்டவாறு அமர்ந்து இருந்து இரண்டு பல் வரிசைகளையும் இணைத்து வைத்துக் கொள்ளவும் நாக்கின் நுனி பற்களைத் தொட்டவாறு இருக்க வேண்டும். பல் ஈறுகள் வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து வாயை மூடவும். வாய், தொண்டை குளிர்ந்தவாறு குளிர்ந்த காற்று சுவாசப்பைகளைச் சென்றடைவதை உணர முடியும். வாயை மூடியவாறு காற்றை மூக்கின் வழியாக வெளியேற்றும் போது வெப்பமாக இருப்பதை உணர முடியும். இது போன்று பத்து முறைகள் செய்யவும்.
சூரிய பகவான் வஞ்சகம் இல்லாமல் எல்லோரையும் கஷ்டப்படுத்தும் போது இது போன்ற ஆசனங்களையும் மூச்சுப் பயிற்சியையும் தினமும் இரண்டு வேளை செய்து வந்தால் கோடை வெப்பத்தொல்லை எமக்கு இல்லை.
கடுமையான வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு யோகா ஆசனங்கள் குளிர்ச்சிப் பிராணாயாமம் போன்றவற்றைச் செய்ய முடியாது மயக்க நிலையை எதிர் கொள்வோருக்கு விசேட யோகா பயிற்சியும் உண்டு. அதுதான் வருண முத்திரை. இம்முத்திரையில் இருக்கும் போது உடலின் நீரிழப்பு மீள் ஈடுசெய்யப்படும். உடலின் நீர்த்தன்மை சமநிலைப்படுத்தப்படும். இதனால், மயக்கம் அடைவதைத்தடுத்து அதிகரித்த வெப்ப காரணமாக ஏற்படும் உபாதைகளைத் தவிர்க்க முடியும்.
உடலினுள் நீரின் சுற்றோட்டம் நன்கு வைக்கப்படுவதால் உடல் எப்போதும் ஈரத்தன்மையுடன் (Moisturized) காணப்படும். வரண்டு போன சருமம் மின்னும். வரட்சியான சருமப் பிரச்சினைகள் அகலும். சரும அழகும் அதிகரிக்கும்.
செய்முறை
உட்கார்ந்து இருந்து கைகள் இரண்டையும் முழங்கால்கள் மேல் வைக்கவும். சிறு விரலை மடக்கி நுனியால் பெருவிரலின் நுனியையத் தொடவும். ஏனைய மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைத்திருக்கவும்.
மேலே விபரித்தவாறு கிரமமாக யோகா பயிற்சிகளில் ஈடுபட்டால் அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்படும் உபாதைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தண்ணீர் விடாய் ஏற்பட்டுத் தண்ணீர் கிடைக்காது தவிப்போர் குளிர்ச்சிப் பிராணாயாமத்தில் ஈடுபட உடனே தாகம் தீரும். இதே போன்று உணவு கிடைக்காது பசித்திருப்போரின் பசி அகலும்.
வெப்பகாலத்தில் மட்டுமல்லாது தினமும் கிரமமாக யோகா பயிற்சிகளில் ஈடுபட்டால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து புற்று நோய் உட்பட எவ்வித நோய்களும் எம்மை நெருங்காது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தாலும் விஷத்தினால் பாதிப்பு ஏற்படாது. உடல், உள ஆன்மீக, சமுதாய ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் என்றும் இளமையுடன் வளமாக வாழலாம்.
இவ்வாறான அதிகரித்த வெப்பமான சீதோஷ்ணநிலை எமது நாட்டில் அடிக்கடி ஏற்படுவதால் சகலரும் வயது வரம்பின்றி யோகாவில் கட்டாயம் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் எமது பாடசாலைகளில் யோகாவை ஒரு பாடமாகக் கற்பித்தால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, ஆரோக்கியத்துடன் கூடிய பண்பாளர்கள் நிறைந்த எதிர்காலச் சமுதாயமும் உருவாகும். நாட்டில் குற்றச் செயல்களும், வன்முறைகளும் குறையும்.
கலாபூஷணம் செல்லையா துரையப்பா
யோகா சிகிச்சை நிபுணர்
உறுப்பினர் – சர்வதேச யோகா
சிகிச்சை நிபுணர் சங்கம்
அமெரிக்கா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM