இந்தியாவில் சிவகங்கையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் ¾ கிலோ கட்டி அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். 

மதுரை அரச வைத்தியர்கள், அறுவை சிகிச்சை செய்து குறித்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான் குடி அருகே அரியாண்டிபுரத்தை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண் புனிதா ராணி(24). தீராத தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டு வந்தது. சிகிச்சைக்காக மதுரை அரசுவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

 பரிசோதனையில் இரத்த அழுத்தம் (250/130) மிகுதியாக இருந்தது. வைத்தியர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்  எடுத்து பார்த்ததில், அவருக்கு சிறுநீரகத்தின் மேல் புறம் உள்ள வலது மற்றும் இடது அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருந்ததை  வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

அட்ரீனல் சுரப்பி, உடலின் தண்ணீர் மற்றும் உப்பு சத்தை சமநிலைப்படுத்தும். கர்ப்பிணி பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் இரு புறமும் கட்டி வருவது மிக அபூர்வமானதாக வைத்திய உலகில் கூறப்படுகிறது.

மதுரை அரச வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.தாமோதரன் தலைமையில் அகச்சுரப்பியல் துறை உதவிப்பேராசிரியர் ச.முத்துக்குமார், அறுவை சிகிச்சைத்துறை உதவிப்பேராசிரியர் பாலமுரளி, மயக்கவியல் துறை வைத்தியர்கள், செல்வகுமார், கார்த்திக் பிரேம்குமார், மகப்பேறுத்துறை வைத்தியர் சுமதி ஆகியோர் அடங்கிய வைத்திய குழுவினர், சுமார் 5 மணி நேரம் போராடி கர்ப்பிணி பெண்ணின் அட்ரீனல் சுரப்பிகளையும் அதில் இருந்த கட்டிகளை அகற்றினர். கட்டிகளை மட்டும் தனியாக அகற்ற முடியாது என்பதால் வைத்தியர்கள் அட்ரீனல் சுரப்பி கட்டிகளையும் சேர்த்து அகற்றியுள்ளனர்.

அதனால், அட்ரீனல் சுரப்பிகள் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்காக இந்த பெண் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுக்கவேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.  இடதுபுறம் அகற்றப்பட்ட கட்டி ½ கிலோ இருந்தது. வலதுபுறம் கட்டி 300 கிராம் இருந்தது.

இதுகுறித்து ‘டீன்’ வனிதா தெரிவித்ததாவது,

‘‘இந்த(பியோகுரோமோசைட்டோமா) அட்ரீனல் கட்டியானது 50 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும் அரிய நோயாகும். மேலும், கற்ப காலத்தில் இது மிகமிக அரிதாக வரும். குறித்த கட்டியானது வந்தால் தாய், சேய்க்க ஆபத்தை ஏற்படுத்தும். தாயின் உயிருக்கு 80 சதவீதமும், சிசுவின் உயிருக்கு 30 சதவீதமும் மரணத்தை ஏற்படும்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு நன்றாகவே உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.