மணம் முடித்து தம்பதிகளாக வாழும் போது எதிர்பார்ப்பது ஒரு குழந்தைப் பாக்கியமே ஆகும். இதனை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் போது உள்ளங்களில் உருவாகும் தவிப்புகள் எத்தனை? சொந்தங்கள், உறவுகள் மட்டுமல்ல சமுதாயத்திலேயே பலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது தடுமாறும் சந்தர்ப்பங்கள் எத்தனை? இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என நிவர்த்தி கடன்கள் பலவைத்தும் பலன்கள் இல்லை என வருந்துவதும் வழமையாகிவிட்டது. இதற்கான சிகிச்சைகள் தான் என்னவென்று தெரியாமல் எங்கு போவது? யாரிடம் சரியான ஆலோசனை பெறுவது? என ஒரு தடுமாற்றம் வாழ்க்கையில் வந்து விடுகின்றது. இதற்கு தம்பதிகள் என்ன செய்வது இறைவனது சோதனையா? எனவும் நினைக்க முடிகின்றது.

இவர்களுக்கு, கூட இருக்கும் மனித உள்ளங்கள் இந்த தம்பதிகளின் மனதை புண்படுத்தாது பக்குவமாகவும் நிதானமாகவும் பேசுவது முக்கிய தேவை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்ற வார்த்தைகள் தொடர்ந்தும் உற்றார், உறவினர்களிடம் இருந்து வருவது காணக்கூடியதாக உள்ளது. 

ஆனால் துன்பத்துக்கு விடைகான மருத்துவத் துறையால் நாம் செய்யக்கூடியது என்ன? என்பதனைத்தான் முதலில் பார்க்க வேண்டும்.

செயற்கை முறை கருக்கட்டல் என்றால் என்ன?

செயற்கை முறை கருக்கட்டல் என்பது இயற்கையான முறையில் கருக்கட்ட தாமதிக்கும் தம்பதிகளுக்கு சிகிச்சைகள் மூலம் விந்தையும் சூல்முட்டையையும் சேரவைத்து கருக்கட்ட உதவுதலேயாகும். இதில் எளிய முறையான IUI முறையிலான கருக்கட்டல், மிகவும் முன்னேற்றகரமான சோதனைக்குழாய் கருக்கட்டலான IVF முறை மற்றும் நுண்ணிய நுட்பகரமான முறையான ICSI முறை என மூன்று முறைகளில் செயற்கை முறை கருக்கட்டல் மேற்கொள்ளப்படும். 

IUI முறை கருக்கட்டல் என்றால் என்ன?

ஆரம்ப சிகிச்சைகள் மற்றும் மாத்திரைகளுக்கு வெற்றிகாண முடியாத சந்தர்ப்பங்களில் IUI முறையை தீர்மானிக்கின்றோம். இதற்கு முக்கியமாக ஒழுங்கான சூல் முட்டை வளர்ச்சி, அடைப்புகள் இல்லாத பலோப்பியன் குழாய்கள் மற்றும் ஓரளவு சராசரியான விந்துகள் என்பன தேவைப்படும். இதற்கு நாம் மருந்துகள் மூலம் சூல் முட்டை வளர்ச்சியை தூண்டி 12ம் நாளில் ஸ்கான் செய்து சூல் முட்டையின் பருமனை அறிவோம். இதன் பருமன் ஓரளவு பருமனாக அதாவது 18 – 20mm ஆக இருந்தால் ஹோர்மோன் ஊசியை வழங்கும் போது முட்டையானது வெளியேறும் பின்னர் 36 மணித்தியாலங்களில் விந்துகளை செறிவாக்கி ஊசி மூலம் கர்ப்பப்பையினுள் செலுத்தப்படும். பின்னர் வழங்கும் ஹோர்மோன் குளிசைகள் மூலம் கரு வளருவதற்கு உதவி அளிப்போம். இதன் போது வெற்றி விகிதம் 35 – 40% ஆக இருக்கும். இதன் செலவு மிகவும் அதிகம் இல்லை. 

சோதனைக் குழாய் கருக்கட்டலான IVF முறை என்றால் என்ன?

IVF முறை கருக்கட்டலானது நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் தாமதமடைந்து வரும் தம்பதிகளுக்கும் பலோப்பியன் குழாய்கள் இரண்டும் முற்றாக அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் விந்துகள் எண்ணிக்கை மிகவும் குறைவான ஆண்களுக்கும் IUI முறை பல தடவை செய்து தோல்வி கண்டவர்களுக்கும் செய்யப்படுகின்றது. மேல் குறிப்பிட்ட காரணங்களுக்கு IVF முறை செய்யும் போது நாம் இம் முறையின் நன்மை, தீமை இரண்டையும் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இதற்கான செலவீனம் மற்றும் இதன் வெற்றி வீதம் என்பன தெளிவுபடுத்தப்பட வேண்டும். வெற்றி வீதம் 25% – 30% ஆகத்தான் இருக்கும் என்பதனை முதலில் அறிவதன் மூலம் ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.

40 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களில் வெற்றி வீதம் கூடுதலாகவும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் வெற்றி வீதம் குறைவாகவும் இருக்கும்.