இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் ஏற்கெனவே திருநாவுக்கரசின் நண்பர்களான சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மகினாம்பட்டி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி பின்னர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12ஆம் திகதி பாடசாலை மாணவியை காரில் அழைத்துச் சென்று ஆபாச வீடியோ எடுத்து அத்துமீற முயன்றதாக திருநாவுக்கரசுவின் நண்பர்கள் மூன்று பேர் பொள்ளாச்சி கிழக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், முறைப்பாடு செய்த மாணவியின் சகோதரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக திருநாவுக்கரசுவின் ஏனைய நண்பர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விசாரணைகளின்போது இவர்கள் இதுபோன்று ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.