வடக்கில் முப்படையினரின் தேவைகளுக்காக பொதுமக்ளின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்தக்கோரி இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தை சுமார்  ஒரு மணித்தியாலம் பூட்டி அலுவகச் செயற்பாட்டை முடக்கும் வகையில், மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்களினால் போராட்டம் நடத்தப்பட்டது.  

வடக்கு மாகாணத்தில் முப்படையினரின் தேவைகளுக்காக பொது மக்களின் காணிகள் வீடுகள் சுவீகரிப்பதை நிறுத்தும் கோரிக்கை மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் வகையில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் சென்றிருந்தனர். 

இந்நிலையில் குறித்த மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்ததன் பிற்பாடு வெளியே வந்த மாகாண சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த நிலையில் அலுவலக கதவை  மூடி குறித்த பிரச்சினைக்கு தீர்க்கமான பதிலை உடன் வழங்குமாறு வலியுறுத்தி கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்பகல் 10.50 மணியளவில் ஆரம்பமான குறித்த கதவடைப்புப் போராட்டம் நண்பகல் 12.01 வரை இடம்பெற்றது. இதன்போது மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற அதிகாரிகள் உட்செல்லவோ வெளிச்செல்லவோ முடியாதவாறு  ஆர்ப்பாட்டக்காரர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அலுவலகக் கதவை  திறக்கமுற்பட்டபோது  போராட்டம் ஒரு மணித்தியாலயம் முன்னெடுப்படும் என்றும் அதற்கு போராட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு ஆர்ப்பாட்டக்கரர்களினால் கோரப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகு அமைவாக காத்திருந்த பொலிஸார் சுமார் ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் குறித்த அலுவலகத்தினை திறந்தனர். எனினும் அரச அதிபர் அதற்கு முன்னரே பிறிதொரு கதவால் வெளியேறியிருந்தார்.  

கதவடைப்பு போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கஜதீபன் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் சதீஸ் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட காணி உரிமையாளர்கள் என சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர் எ.கே.சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் முப்படையினர் தேவைக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது நிறுத்தப்படவேண்டும்.

ஏற்கனவே 65 ஆயிரம் ஏக்கர் காணிகள் அளக்கப்பட்ட நிலையில் அவற்றில் 10 வீதம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஒருகையால் வாங்கி மறுகையில் காணி சுவீகரிப்பதை ஏற்க முடியாது.

2013 ஆம் ஆண்டு கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  நடைமுறைப்படுத்திய காணி சுவீகரிப்பை நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்துகின்றனர்.   

காணி அளவீடுகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கும் போது நிலஅளவை திணைக்களம் நிறுத்துவதும் பின்னர் தொடர்வதுமாக கிளித்தட்டு விளையாட்டுப்போன்று செயற்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே யாழ்ப்பாண நில அளவை திணைக்கள அலுவலகத்தை மறித்துபோராட்டம் நடத்தினோம்.  

மேலும் முல்லைத்தீவிலும் இத்தகைய செயலை செய்கிறார்கள். எனவே, இவை நிறுத்தப்படவேண்டும்.தொடர்ந்தும் இச் செயற்பாடு இடம்பெற்றால் மத்திய அரசாங்க அலுவலகம், மாகாண சபை அலுவலகம் என்பன முற்றுகைக்குள்ளாக்கப்படும்.

 இவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க முதல் ஜனாதிபதி, பிரதமர் தலையிட்டு குறித்த பிரச்சினைகளை நெறிப்படுத்தவேண்டும். அத்துடன் வடமாகாண முதலமைச்சரும் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த முனையவேண்டும் என்றார். 

இதன்போது, அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் பிறிதொரு கதவால் வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.நியூட்டன்)