புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை  சம்பவத்தில்  மேலும் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தெரிவித்தனர்.  

இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையை இம் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி  வித்தியா  படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டபோதே, குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு நீதிபதியிடம் தெரிவித்தனர்.

மாணவியின் படுகொலை தொடர்பில் 10 சந்தேக நபர்கள் வரை கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஊர்காவல்துறை நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த மாதமளவில் இக்கொலையை நேரில் பார்த்த சாட்சியம் என்ற வகையிலும் வேறு வகையில் இக்கொலையோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே இக்கொலையோடு தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  மேலும் ஒரு நபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வுதுறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.  

 குறித்த வழக்கு தொடர்பாக பூரணமான விசாரனைகளை மேற்கொள்வதற்கு அதிககால அவகாசம் தேவையெனவும்  மன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வழக்கு விசாரனையின் போதும் படுகொலை தொடர்பாக சேகரிக்கப்பட்ட மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தடயங்கள் தொடர்பான அறிக்கைகள் எதனையும் குற்றப்புலனாய்வு பிரிவு மன்றில் சமர்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இதனையடுத்து, இவ் வழக்கு விசாரணையை இம் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார். 

இதேவேளை, நீதிமன்ற விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சிக்கவோ நிறுவனங்களில் முறையிடவோ கூடாது எனவும் அவ்வாறான விடயங்கள் ஏதேனும் இருப்பின் அது தொடர்பாக நீதிமன்றிலேயே தெரிவிக்கமுடியும் எனத் தெரிவித்த நீதிவான், அவ்வாறில்லாமல் செயற்படுமிடத்தில் அச் செயற்பாடுகள்  தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சந்தேக நபர்களை எச்சரித்தார்.  

(ரி.விஷரூஷன்)